அம்மா – மகன் பாசம், அப்பா – மகள் பாசம், அண்ணன் – தங்கை பாசம், அக்கா – தம்பி பாசம் ஆகியவற்றை மையமாக வைத்து பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால், ஒரு மாமனாருக்கும், மருமகனுக்கும் இருக்கும் பாசத்தை இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நெகிழ்ச்சியுடன் கூடிய படத்தைக் கொடுத்த இயக்குனர் முத்தையாவுக்கு முத்தான வாழ்த்துகள். கிராமத்து மனிதர்கள், கிராமத்து மக்கள் என்றாலே இன்னமும் சிலருக்கு ஒரு எகத்தாளம் இருக்கும். கிராமத்து மனிதர்களிடம் எந்த அளவிற்கு பாசம் உயர்ந்து நிற்கிறது என்பதை இந்தப் படம் அருமையாக உணர்த்தியிருக்கிறது. தமிழ் சினிமா கொஞ்சம் அதிகமாகவே மறந்து போய்விட்ட கிராமத்துப் பின்னணியை கதைக்களமாக அமைத்து அந்த யதார்த்த மனிதர்களை, யதார்த்தமாகவே திரையில் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். படத்தில் எந்த ஒரு இடத்திலும் சாதியைப் பற்றிய ஏற்றத் தாழ்வோ, கேலிப் பேச்சோ கிண்டலோ இல்லை என்பதை இந்த இடத்தில் அழுத்தமாகப் பதிய வைக்க விரும்புகிறோம். இந்தப் படத்தை சாதியின் பெயரால் தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பவர்கள் போய் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்து உறவுகளின் அருமை என்ன என்பதை புரிந்து கொள்ளட்டும். அரச நாடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி, ஆடுகளை விற்று வியாபாரம் செய்பவர். எந்த வம்பு என்றாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னே நின்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பவர். அவருக்கு செம்மை நாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்கிரணின் மகள் லட்சுமி மேனனைப் பார்த்ததும் பிடித்துப் போகிறது. பெரியவர்கள் சம்மதிக்க திருமணம் நடக்கிறது. ஆனால், திருமணத்திற்கு முன் தன்னைப் பற்றி ஊரில் மாமனார் ராஜ்கிரண் விசாரித்ததில் கோபமடையும் கார்த்தி, மாமனாரை மதிக்காமலே இருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மாமனாரை அடித்தும் விடுகிறார். அதன் பின் தன் தவறை உணர்ந்து கோபித்துக் கொண்டு சென்ற மனைவி லட்சுமி மேனனை அழைத்து வந்து குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறார். இதனிடையே அரச நாடு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நிற்பதில் வெள்ளநாடு கிராமத்தைச் சேர்ந்த சூப்பர் சுப்புராயன் குடும்பத்தினருக்கும் கார்த்திக்கும் மோதல் வெடிக்கிறது. இதனால் கார்த்தி குடும்பத்தையே அழிக்க சூப்பர் சுப்புராயன் துடிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிராமத்துப் பக்கம் வந்து புகுந்து விளையாடியிருக்கிறார் கார்த்தி. ‘கொம்பன்’ என்ற பெயருக்கேற்ப எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவிழ்த்து விட்ட காளையாகவே திரிகிறார். கல்யாணம் ஆன பின்னும் அவர் அப்படி இருப்பதுதான் பிரச்சனையே. ஒரு பக்கம் அடிதடி, பிரச்சனை என கோபமாகத் திரிந்தாலும், மற்றொரு பக்கம் அம்மா பாசம், மனைவி மீது பாசம், மாமனார் மீதும் பாசம் என மனதிலும் இடம் பிடிக்கிறார். அதிலும் கிளைமாக்சுக்கு முன்னர் மாமனாரிடம், தான் அவர் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்பதைப் பற்றிச் சொல்லும் காட்சியில் மாமனார் என்பவரும் ஒரு தந்தைக்குச் சமம் என உணர வைக்கும் காட்சி படத்தின் ஹைலைட். அடிதடியில் அடி பின்னி எடுத்திருக்கிறார். லட்சுமி மேனனுக்கென்றே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம், பழனி கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாவில்லை. கார்த்தியை முதன் முதலில் பார்ப்பதிலிருந்து அவர் கண்கள் மேய்வதில் கூட அப்படி ஒரு காதல் இருக்கிறது. ஒரு டூயட் பாடலில் மிக நெருக்கமாக வேறு நடித்து பதற வைக்கிறார். மாடர்ன் கேரக்டர்லாம் வேண்டாம்மா…இப்படியே லட்சுமிகரமா வந்து நடிச்சிட்டுப் போம்மா…என சொல்ல வைக்கிறார். ராஜ்கிரண், முத்தையா என்ற கதாபாத்திரத்தில் வழக்கமாக சொல்வதைப் போல வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதற்கும் மேல் நடித்திருக்கிறார். முத்தையா கேரக்டருக்குள் அவர் புகுந்து விட்டாரா அல்லது, ராஜ்கிரண் முத்தையா கேரக்டருக்குள் புகுந்து விட்டாரா என்று யோசிக்க வைக்கிறது. எல்லா தந்தைக்கும் தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்ற பாசத்தை, ஏக்கத்தை உணர்த்தும் அவருடைய வசனங்கள் கைதட்டல் பெறும். கார்த்தியுடன் எப்போதுமே இருக்கும் தம்பி ராமையா யதார்த்தமான நகைச்சுவைக்கும், கோவை சரளா அதிகமான கூச்சல் போடாமலும் அடக்கமாக நடித்து சிரிக்க வைக்கிறார்கள். கருணாஸ் கொஞ்சமாக வந்தாலும் கதையின் போக்கை மாற்றக் கூடிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன், மாரிமுத்து, மற்றும் சூப்பர் சுப்பராயனின் மகன்களாக நடித்திருக்கும் அனைவருமே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அரச நாடு ஊர் பெரியவர் வேலராம்மூரத்தி மற்றும் படத்தில் நடித்திருக்கும் பல மீசை மனிதர்களிடம் கூட யதார்த்தமான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ‘கருப்பு நிறத்தழகி…, கம்பி கரை வேட்டி…’ இரண்டு பாடல்களும் மண் மணம் வீசும் பாடல்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவில் அரச நாடு, செம்மை நாடு, வெள்ள நாடு அனைத்துமே செம்மையாக உள்ளன. கிளைமாக்ஸ் காட்சி இரவில் நடந்தாலும் அதன் தாக்கம் உள்ளுக்குள் ஏறுகிறது. திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது. அனைத்து மாமனாரும், மருமகன்களும், மனைவி மக்களுடன் குடும்பத்தோடு போய் ஒரு முறை படத்தைப் பாருங்கள். நமது குடும்பத்து உறவு முறைகளை நாமும் மெச்சும்படி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ‘கொம்பன்’ – கொண்டாட வேண்டிய படம்.