ஒரு பரபரப்பான த்ரில்லர் படம்தான் ‘கொலைகாரன்’. ஒரு கொலை, அதைச் சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்கள், யார் கொலைகாரன் என கண்டுபிடிக்கப் போராடும் போலீஸ் அதிகாரி…எதிர்பார்க்க முடியாத கிளைமாக்ஸ் என அடுத்து என்ன நடக்கப் போகிறது என நம்மால் யூகிக்க முடியாத அளவிற்கு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.
படத்தின் மிகப் பெரும் பிளஸ் பாயின்டாக இருப்பது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அதற்கான பொருத்தமான நட்சத்திரத் தேர்வு மற்றும் அவர்களின் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு.
கட்டுமானக் கம்பெனி ஒன்றில் வேலை செய்பவர் விஜய் ஆண்டனி. அவரது எதிர் பிளாட்டில் அம்மா சீதா, மகள் அஷிமா நர்வால் குடியிருக்கிறார்கள். சென்னை, வியாசர்பாடி பகுதியில் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அந்த வழக்கை டிசிபி அர்ஜுன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறந்தவர் ஆந்திர மந்திரி ஒருவரின் தம்பி எனத் தெரிய வருகிறது. அஷிமா நர்வால் ஹைதராபாத்தில் இருக்கும் போது அவருக்கு டார்ச்சர் செய்தவர்தான் அந்த மந்திரியின் தம்பி. அதனாலேயே அஷிமா அம்மா சீதாவுடன் சென்னைக்கு வந்திருக்கிறார். அஷிமா, சீதா இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பார்களா என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பிக்கிறார் அர்ஜுன். ஆனால், விஜய் ஆண்டனி அந்தக் கொலையை தான் தான் செய்ததாக போலீசில் சரணடைகிறார். இதன் பின்ன என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு போலீஸ் அதிகாரி இப்படித்தான் விசாரணையை நடத்துவாரோ என்று நம்பும் அளவிற்கு அவ்வளவு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அர்ஜுன். இவரும் விஜய் ஆண்டனியும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அவ்வளவு அழுத்தமாக அமைந்துள்ளன. அதிலும் விஜய் ஆண்டனி வேலை செய்யும் இடத்திற்குச் சென்று அர்ஜுன் பேசும் காட்சியில், அர்ஜுன் அவரது போலீஸ் அதிகாரத்தைக் காட்ட, அதற்கு அலட்சியமாக விஜய் ஆண்டனி பதிலளித்து அந்த இடத்தை விட்டுச் செல்லும் காட்சி, அதில் அவர்கள் இருவரின் நடிப்பு சிம்ப்ளி சூப்பர்ப். ஒவ்வொரு கட்டத்திலும் தான் தோற்றுப் போய்விடக் கூடாது, உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அர்ஜுனின் கடமை உணர்வு நடிப்புக்கு ஒரு சல்யூட்.
விஜய் ஆண்டனி யார், அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார், அவருடைய பின்னணி என்ன என ஆரம்பம் முதலே அவர் கதாபாத்திரம் மீது நமக்கும் ஒரு தெளிவான குழப்பம் வருவது போன்ற பாத்திரப் படைப்பு, அதை உணர்ந்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இவையெல்லாம் படத்திற்கு பக்கபலம். இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் என்றால் விஜய் ஆண்டனிக்கு சொல்லவா வேண்டும். அந்த வெறித்த பார்வையிலும், தெனாவெட்டான பேச்சிலும் அவர் கதாபாத்திரத்தை மிகச் சரியாக நியாயப்படுத்துகிறார்.
அஷிமா நர்வால், தமிழில் முதல் படம். பொதுவாக ஹீரோயின்களுக்கு படங்களில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைப்பது அரிது. அதிலும், முதல் படத்தில் பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அஷிமாவுக்கும் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். தவறு செய்துவிட்டு, அந்தத் தவறைச் செய்யாத மாதிரி நடிக்க வேண்டிய கதாபாத்திரம். தமிழ் தெரியாமல் கதாபாத்திரத் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சீதா, நாசர், பகவதி பெருமாள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கூட எந்த ஒரு இடத்திலும் மிகைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தாமல், அந்தந்த கதாபாத்திரங்களில் அளவுடன், இயல்புடன் நடித்திருக்கிறார்கள்.
இம்மாதிரியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் பின்னணி இசைக்கு மிகப் பெரும் பங்கு இருக்கும். அதை மிகச் சரியாக உணர்ந்து படத்தை தன் பின்னணி இசையாமல் மேலும் பேச வைத்திருக்கிறார் சைமன் கே கிங். அதிலும் அந்த தீம் மியூசிக் அப்படியே உள்ளுக்குள் இறங்குகிறது. ஒளிப்பதிவாளர் முகேஷ், படத் தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் டெக்னிக்கலாக அசத்தியிருக்கிறார்கள்.
கிளைமாக்சுக்கு முன்பாக எதிர்பாராத சில திருப்பங்கள் வித்தியாசமான படம் என்பதிலிருந்து கொஞ்சம் மாறி, பழி வாங்கும் கதையாகக் கொஞ்சம் தடம் மாறுகிறது. படத்தில் வைத்துள்ள அந்த இரண்டு பாடல்கள் கூடத் தேவையில்லை. பாடல்கள் இல்லாத படமாக இருந்தால் கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்.
காமிரா கோணம், எடிட்டிங் ஸ்டைல், திரைக்கதை யுக்தி, நடித்தவர்களின் மெச்சூர்டான நடிப்பு என மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தரத்துடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறது ‘கொலைகாரன்’ குழு.
கொலைகாரன் Vs காவல்காரன்….ஏட்டிக்குப் போட்டி…