நாசர் அணியை எதிர்த்து பாக்யராஜ் அணி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜுன் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை ஜுன் 8ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

தற்போதைய நிர்வாகிகளாக இருக்கும் நாசர் தலைமையிலான அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது.

நாசர் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் ஆக விஷால், பொருளாளர் ஆக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கடந்த முறை துணைத் தலைவராக இருந்த பொன்வண்ணன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

நாசர் அணியை எதிர்த்து நிற்கும் பாக்யராஜ் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் ஆக ஐசரி கணேஷ், துணைத் தலைவர்களாக குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா, ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம், ரஞ்சனி, சிவகாமி, கே.ராஜன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரமேஷ் கண்ணா, ஷ்யாம், பரத், ஸ்ரீகாந்த், விமல், நிதின் சத்யா, அயூப் கான், மருதுபாண்டியன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பபட்ட நாசர் தலைமையிலான அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கான பெயர்ப் பட்டியலில் குட்டி பத்மினி, சங்கீதா ஆகியோர் இருந்தார்கள். அவர்கள் நாசர் தலைமையிலான அணியிலிருந்து விலகி தற்போது பாக்யராஜ் தலைமையிலான அணியில் இணைந்திருக்கிறார்கள்.

மேலும் சில நாடகக் கலைஞர்கள் செயற்குழு உறுப்பினர் பதவியில் இந்த அணிக்காக போட்டியிட உள்ளார்கள்.

நாசர் தலைமையிலான அணியை எதிர்த்து புதிய அணி உருவாகாது என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இப்போது பாக்யராஜ் தலைமையிலான அணி உருவாகியிருப்பதால் நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாகி உள்ளது.

 

Read Previous

தமிழ் சினிமா – இன்று ஜுன் 7 வெளியாகும் படங்கள்

Read Next

கொலைகாரன் – விமர்சனம்

Most Popular