கண்ணா லட்டு தின்ன ஆசையா – விமர்சனம்

klta 3

தயாரிப்பு – ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், ஹேன்ட் மேட் பிலிம்ஸ்

இயக்கம் – கே.எஸ். மணிகண்டன்

இசை – தமன்

ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம்

படத்தொகுப்பு – ராமாராவ்

கலை – வனராஜ்

நடனம் – ராபர்ட், அஜய், சிவசங்கர்

பாடல்கள் – வாலி, விவேகா, கானா பாலா

நடிப்பு – சேது, சந்தானம், சீனிவாசன், விசாகா சிங், கோவை சரளா, விடிவி கணேஷ், சிவசங்கர் மாஸ்டர், ‘பட்டிமன்றம்’ ராஜா, வனிதா, தேவதர்ஷினி மற்றும் பலர்.

வெளியான தேதி – ஜனவரி 13, 2013.

தியேட்டருக்கு படம் பார்க்க எதுக்கு போறோம் ஒரு இரண்டரை மணி நேரம் நமக்கிருக்கிற கவலையெல்லாம் மறந்து ஜாலியா பார்த்து சிரிக்கிறதுக்குதான. ஆனால், இது நிறைய பேருக்கு புரியவே மாட்டேங்குது.

உள்ள போய் பார்த்தால், சம்பந்தமேயில்லாம ‘பன்ச்’ டயலாக் பேசிக்கிட்டு, ஒரே கையால ஒரே நேரத்துல ‘பத்து’ பேரை அடிச்சிக்கிட்டு, சான்ஸ் கிடைச்சால் ஒரு ‘குத்து’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கிட்டு , நம்மள ஏண்டா படம் பார்க்க வந்தோம்னு நோகடிச்சிடுவாங்க. ஆனால், இந்த படத்துல அப்படிலாம் எதுவும் இல்லாம, நாம எதை ரசிக்க வர்றோம்கறத புரிஞ்சிக்கிட்டு, ஒரு காட்சி விடாம சிரிக்க வச்சிடறாங்க, ரசிக்கவும் வச்சிடறாங்க.

டைரக்டர் மணிகண்டனுக்கு இதுதான் முதல் படமாம். சொன்னால் நம்பறது கஷ்டம். ஆக்ஷன் அடிதடி படத்தையெல்லாம் கூட கொஞ்சம் கஷ்டப்பட்டா எடுத்துடலாம். ஆனால், ஒரு காமெடி படத்தை எடுக்கறது சாதாரண விஷயமில்லை. மணிகண்டன் ஸார், உங்களுக்கு  ‘நல்ல நேரம்’ ஸ்டார்ட் ஆயிடுச்சி.

படத்துல பெருசா கதைலாம் ஒண்ணும் இல்லை. ஒரு பெண்ணை மூணு பேர் காதலிக்க போட்டி போடறாங்க. அதுல யாரு ஜெயிக்கிறான்கன்றதுதான் கதை.

சேது, சந்தானம், சீனிவாசன் (பவர் ஸ்டார்) மூணு பேரும் ஃபிரண்ட்ஸ். சேது வீட்டுக்கு எதிர்ல குடி வர்ற விசாகா மேல மூணு பேருக்குமே காதல் வருது. மூணு பேரும் போட்டி போட்டு விசாகா மனசுல இடம் பிடிக்க முயற்சி பண்றாங்க. இது நிறைவேறுதா இல்லையான்கறதுதான் படத்தோட கிளைமாக்ஸ்.

மூணு ஹீரோங்கறதால யாரைப் பத்தி முதல்ல சொல்றது.

தயாரிப்பாளரா இருந்தாலும் தனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துக்காத சந்தானத்தோட பெரிய மனசை பத்தி சொல்றதா.

காமெடியன்னு கூட தெரியாம நம்ம எல்லாரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற பவர்ஸ்டாரை பத்தி சொல்றதா.

அப்பாவியா இருந்துக்கிட்டு கடைசில ஹீரோயின் மனசுல இடம் பிடிக்கிற சேதுவை பத்தி சொல்றதா.

சரி, காமெடி படம்கறதால நம்மள கலகலப்பா சிரிக்க வைக்கிற பவர்ஸ்டாரைப் பத்தியே முதல்ல சொல்லிடுவோம்.

இத்தனை நாள் வரைக்கும் பவர்ஸ்டாரை ஒரு கிண்டலாவே எல்லாரும் பார்த்துட்டு வர்றோம். அது இந்த படம் மூலமா கண்டிப்பா மாறிடும். அவரை எப்படி பயன்படுத்தினா ரசிகர்கள் ரசிப்பாங்களோ, அதை கரெக்டா செஞ்சிருக்காரு இயக்குனர். எதைப் பத்தியும் கவலைப்படாம, செய்யற வேலைய கரெக்டா செய்வோம்னு செஞ்சி ஜெயிச்சிருக்காரு பவர்ஸ்டார். ‘உங்களோட மன தைரியத்தை’ பாராட்ட வார்த்தைகளே கிடையாதுங்க.  பொங்கல் போட்டியில இந்த லட்டை எல்லாரும் ரசிக்க வச்சிட்டீங்களே.

சந்தானம், ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்துல உங்க தப்பு எதுவும் இல்லன்னு இந்த படம் மூலமா புரிய வச்சிட்டீங்க. இந்த படத்துல ‘டபுள் மீனிங்’ டயலாக்ஸ் நீங்க நினைச்சிருந்தால் எவ்வளவோ வச்சிருக்கலாம். ஆனால், அப்படி எதுவும்  பண்ணாததுக்கு உங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். இனிமேல், டைரக்டர்ஸை கூட பார்த்து செலக்ட் பண்ணுங்க. உங்க பாஷைல சொல்லணும்னா, ‘அட்டு’ படத்துலலாம் நடிச்சி உங்க ‘துட்டு’க்கு சேதாரம் வராம பார்த்துக்குங்க.

அறிமுக ஹீரோ சேது. கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு. அப்பாவித்தனத்தை விட அழகுத்தனம் அதிகமாவே இருக்கு. முயற்சி பண்ணால் முன்னணி ஹீரோவா வரதுக்கும் வாய்ப்பு இருக்கு.

படத்துல ‘லட்டு’ விசாகா. சும்மா சொல்லக் கூடாது லட்டு மாதிரிதான் இருக்காங்க. முக்கியமா அவங்களுக்கு கொடுத்திருக்கிற டிரஸ்லாம் சூப்பர், அதுலயும் பாடல் காட்சிகள்ல அட்டகாசம். நிறைய சீன்ல அழகா தெரியறாங்க. ஆனால், ஒரு சில சீன்ல மேக்கப் சரியில்லை, ஓவர் குளோஸப் ஏன்னு வேற தெரியலை (கோவை சரளா கூட ஆட்டோல வர்ற சீன்), இதெல்லாம் தவிர்ச்சிருக்கலாம்.

கோவை சரளா, விடிவி கணேஷ், சிவசங்கர் மாஸ்டர் இந்த ‘லட்டு’ல இருக்கிற ‘முந்திரி’ மாதிரி. இனிப்புக்கு இன்னும் கொஞ்சம் இனிப்பு சேர்க்கிறாங்க. அந்த ‘குண்டு’ பையன் மாஸ்டர் ஆனந்த் ‘லட்டு’ல இருக்கிற ‘குண்டு’ திராட்சை.

‘சிம்பு’ கௌரவ தோற்றத்தில வந்து கௌரவமா ஒரு வசனம் பேசிட்டு போயிடறாரு.

தமன் இசையில, ‘ஆசையே அலை போல……, ‘அடியே அடி அன்னக்கிளியே….’ ரெண்டு பாட்டும் ரசிக்க வச்சிருக்கு.

ஒரு ‘லட்டு’ நல்லா வரணும்னா அதுக்கு முக்கியமா ‘பூந்தி’ நல்ல பதமா வரணும். அப்படி இந்த படத்துக்காக உழைச்சிருக்கிற எல்லாருமே ‘நல்ல’ பூந்தியா இருக்கிறதால இந்த ‘லட்டு’, சூப்பர் டேஸ்ட்டா வந்திருக்கு…

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ – இன்னொரு லட்டு தின்ன ஆசைதான். சீக்கிரம் ‘பார்ட் 2’ ரெடி  பண்ணுங்க…

Read Previous

விஜய் நடிக்கும் ‘தலைவா’ லோகோ….

Read Next

‘தலை’ படத்தின் தலைப்பு ‘வலை’

Most Popular