தயாரிப்பு – மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் – மணிரத்னம்
இசை – ஏ.ஆர். ரகுமான்
பாடல்கள் – வைரமுத்து, மதன் கார்க்கி
ஒளிப்பதிவு – ராஜீவ் மேனன்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
கதை, வசனம் – ஜெயமோகன்
திரைக்கதை – மணிரத்னம், ஜெயமோகன்
சண்டைப் பயிற்சி – கனல் கண்ணன், கிச்சா
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
நடிப்பு – கௌதம் கார்த்திக், துளசி, அரவிந்த்சாமி, அர்ஜுன், பொன்வண்ணன், லட்சுமி மஞ்சு மற்றும் பலர்.
வெளியான தேதி – பிப்ரவரி 1, 2013.
மணிரத்னம் இயக்கும் படத்திற்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்தியா முழுவதும் பேசப்படும் இயக்குனர். வெற்றிப் படங்கள் கொடுத்தாலும் பேசப்படுவார், தோல்விப் படங்கள் கொடுத்தாலும் பேசப்படுவார். ஆக, எப்படிப்பட்ட படம் கொடுத்தாலும் பேசப்பட்டு விடுவார்.
இந்த ‘கடல்’ படத்தில் இரண்டாவதாக சொன்ன விதத்தில்தான் பேசப்படுவார்.
கடந்த வருடம் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட வருடம் என தாராளமாகச் சொல்லலாம். எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ஏமாற்றியதும், எதிர்பாராத படங்கள் வெற்றிப்படியில் ஏறியதும் நடந்தது. படம் பார்க்க வரும் ரசிகர்களின் மனநிலை மாறியிருக்கிறது என்பதை இது தெளிவுபடுத்தியது.
’கடல்’ படத்தின் முதல் காட்சியிலேயே கேமிரா மெதுவாக நகரும் போதே ஆஹா…இது நாம நினைச்சி வந்த படம் இல்லடான்னு சொல்லாம சொல்லிட்டாரு இயக்குனர் மணிரத்னம்.
சரி , கதைக்கு வருவோம். தவறான வழியில் பிறந்தவர் கௌதம். அந்த கடற்கரையோர கிறிஸ்துவ கிராமத்தில் சிறு வயதிலேயே அம்மாவை பறி கொடுத்து, முரட்டுத்தனமாக வளர்கிறார். அந்த ஊர் சர்ச்சுக்கு ஃபாதராக வருகிறார் அரவிந்த்சாமி. முரட்டுத்தனமாக இருக்கும் சிறுவன் கௌதமிற்கு ஆதரவாக இருக்கிறார்.
ஒரு நாள், கடற்கரையோரத்தில் அர்ஜுன் சுடப்பட்டு விழுந்து கிடக்க , அவரைக் காப்பாற்றுகிறார் அரவிந்த்சாமி. அர்ஜுனை சுட்டவர்கள் மீண்டும் வரலாம் என்ற சூழ்நிலையில் ஒரு மறைவிடத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து தங்க வைக்கிறார். அர்ஜுன் அவர் காதலியான லட்சுமி மஞ்சுவை அழைத்து வரச் சொல்கிறார். லட்சுமி மஞ்சு வந்த பின் ஒரு நாள் திடீரென அர்ஜுன் காணாமல் போகிறார்.
அரவிந்த்சாமியும், லட்சுமி மஞ்சுவும் ஊர் மக்களிடம் தனியாக பிடிபடுகிறார்கள். அவர்கள் மீது ஒன்றாக இருந்ததாக வீண்பழி சுமத்தப்பட, லட்சுமி மஞ்சுவும் அதை ஆமோதிக்கிறார். அப்போது நடக்கும் சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட கொலைப்பழி அரவிந்த்சாமி மீது விழுந்து அவர் சிறைக்குச் செல்கிறார். ஆனால், இவையனைத்திற்கும் காரணம் அர்ஜுன்தான். அரவிந்த்சாமி மீதுள்ள பழைய விரோதம் காரணமாக திட்டமிட்டு சதி செய்து அவரை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.
அர்ஜுன் ஒரு கடத்தல்காரர், அவரிடம் வந்து அடைக்கலமாகிறார் கௌதம். சிறை தண்டனை முடிந்து அரவிந்த்சாமி வெளிவந்து தன்னால் வளர்க்கப்பட்ட கௌதமை அர்ஜுனிடமிருந்து பிரிக்கிறார். இதன் பின்னும் அர்ஜுன், அரவிந்த்சாமி மோதல் நீடிக்க கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தோட பேர்தான் ‘கடல்’. ஆனால் கிளைமாக்ஸ் மட்டும்தான் கடல்ல நடக்குது. மீதி காட்சிகள் எல்லாமே கடற்கரையிலதான்..பேசாம ‘கடற்கரை’ ன்னு பேர் வச்சிருக்கலாம்.
படத்துல ஹீரோவா அறிமுகமாகியிருக்கிற கௌதம், ‘நவரச நாயகன்’ கார்த்திக் மகன்றத நிரூபிச்சிருக்காரு. ஆனாலும், நவரசத்தை கொட்டி நடிக்கிற மாதிரி அவருக்கு படத்துல அதிகமான காட்சிகள் இல்லாத மாதிரியே இருக்கு.
படத்தோட ஹீரோக்கள்னா அர்ஜுனும், அரவிந்த்சாமியும்தான். ஆனால் அர்ஜுன் ‘சாத்தான்’, அரவிந்த்சாமி ‘ தேவதூதன்’. அவங்க வசனத்துல சொன்னதுதான்..
ஹீரோயினா அறிமுகமாகியிருக்கிறவங்க நடிகை ராதா மகள் ‘துளசி’. ஸாரி, துளசி ‘யான்’ படத்துல உங்களை ரொம்பவே எதிர்பார்க்கிறோம். படத்துல உங்களுக்கு குழந்தை மனசு, அதனால நாங்களும் குழந்தை மனசாவே உங்களுக்கு பிடிச்ச ‘புளிப்பு மிட்டாய்’ தான் தருவோம். ‘யான்’ படம் பார்த்துட்டு ஸ்வீட் பாக்ஸ் தரலாம்னு இருக்கோம்.
அர்ஜுன், அரவிந்த்சாமியால் ‘போட்டு’ கொடுக்கப்பட்டு ‘ஃபாதர்’ படிப்பை விட்டு வெளியேற்றப்படுபவர். அதனால் அரவிந்த்சாமியைப் பழி வாங்க சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்து, சில பல வில்லத்தனங்களைப் புரிந்து தமிழ் சினிமாவின் வழக்கப்படியே திருந்தி விடுகிறார்.
அரவிந்த்சாமி இன்னும் அதே ‘பளிச்’ தோற்றத்தில் இருக்கிறார். ஆனாலும் நடிப்பில் அந்த ஈர்ப்பு கொஞ்சம் மிஸ்ஸிங்.
லட்சுமி மஞ்சு, சிங்கம் புலி வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். பொன்வண்ணன் வழக்கமான நெகட்டிவ் கேரக்டர்.
படத்தில் கன்னியாகுமரி மாவட்ட தமிழ் தான் அனைவரும் பேசுகிறார்கள். பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவேயில்லை, வட தமிழ்நாட்டவர் எப்படி புரிந்து கொள்வது ? . ஆங்காங்கே ‘கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு .
ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் சித்திரை நிலவு, மூங்கில் தோட்டம், ஏலே கீச்சான்….ரசிக்க வைக்கின்றன. ‘நெஞ்சுக்குள்ளே ’ படமாக்கப்பட்ட விதம் பெருத்த ஏமாற்றம்.
ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் மூங்கில் தோட்டம் பாடல் மட்டுமே கண்களுக்கு விருந்து…மற்ற காட்சிகளில் விஷுவல் ட்ரீட் அதிகம் என்று சொல்ல முடியாது.
ஸ்ரீகர் பிரசாத் காட்சிகளின் ஓட்டத்திற்கு நிறையே ‘கட்’ போட்டிருக்கலாம். மெல்ல காட்சி நகரும் யுக்தி இன்றைய தலைமுறை அதிகம் ரசிப்பதில்லை.
இந்த ‘கடல்’ காற்றில் ‘கரிப்பு’ தான் அதிகம்…