இரண்டாம் உலகம் – விமர்சனம்

irandam ulagam 1911_00018

னவுக்கும் சினிமாவுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. அதனால்தான் சினிமாவை ‘கனவுத் தொழிற்சாலை’ என்று சொல்கிறார்கள்.

இயக்குனர் செல்வராகவன் கண்ட ஒரு கனவை , எந்த அளவிற்கு திரையில் படைத்திருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டும்.

“ஃபேன்டஸி” படங்களின் வரிசையில் இந்த படமும் நிச்சயம் இடம் பெறும். அதே சமயம், “ஃபீலிங்” படமாக அமையுமா என்பது மிகப் பெரிய கேள்விதான்.

“காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி” படங்களுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கிய படங்கள் ஏனோ “ஃபீலிங்காக” அமையவில்லை.

அவரின் இயக்கமும், யுவனின் இசையும் அந்த படங்களை நம்மை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்று ரசிக்க வைத்தன.

அவர் இயக்கிய “ஆயிரத்தில் ஒருவன்” படம் ஆச்சரியப்பட வைத்தது. இந்த ‘இரண்டாம் உலகம்’ இயல்பை விட்டு எங்கே தள்ளிச் சென்றுள்ளது. முழுக்க முழுக்க கனவுலகில் சஞ்சரித்து வந்ததைப் போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது.

ஒரு தெளிவில்லாத மனநிலையிலே அவர் படத்தை எடுத்திருப்பாரோ என்று யோசிக்க வைக்கிறது. “இரண்டாம் உலகம்” என்று சொல்லி விட்டு விட்டார். அந்த உலகிற்கு என்று வேறு பெயரில்லை.

படத்தின் ஆரம்பத்திலேயே “இந்த பூமியைப் போன்றே கோடிக்கணக்கான கிரகங்கள்” உள்ளன என்ற அறிவியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர், கதையில் கொஞ்சமாவது வைத்திருக்கலாம்.

சரி, கதைக்கு வருவோம்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் சமூக நலம் கொண்ட குணம் கொண்ட ஆர்யாவை, ஒரு டாக்டரான அனுஷ்கா காதலிக்கிறார். முதலில் , அனுஷ்கா காதலை ஏற்க மறுக்கும் ஆர்யா, பின்னர் காதல் வயப்பட்டு அனுஷ்காவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். காதல் கைகூடி வரும் நேரத்தில் அனுஷ்கா திடீரென இறந்து போகிறார்.

காதலியின் பிரிவால் துயரத்தில் இருக்கும் ஆர்யாவிடம் “ஒரு சக்தி” அவரது காதலி அனுஷ்கா எங்கோ உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ‘இரண்டாம் உலகத்திற்கு’ பயணிக்கிறார் ஆர்யா. அங்கு வேறு ஒரு “ஆர்யா, அனுஷ்கா” இருக்கிறார்கள். அந்த இரண்டாம் உலகத்தில் ஒரு பிரச்சனை. அதை ஆர்யா ஆர்யா, அனுஷ்கா எப்படி தீர்க்கிறார்கள், இந்த உலகத்தைச் சேர்ந்த ஆர்யா, அந்த உலகத்தில் உள்ள அனுஷ்காவைப் பார்த்ததும் என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை.

முடிஞ்ச அளவுக்கு புரியற மாதிரி கதைய சொல்லிட்டோம்னு நினைக்கிறோம்.

இந்த உலகம், இரண்டாம் உலகம் என இரண்டு ஆர்யா, இரண்டு அனுஷ்கா. ஒன்றுக்கொன்று நேரெதிரான கதாபாத்திரங்கள். இந்த உலகத்தில் இருவருமே அமைதியானவர்களாக காதல் புரிந்து பிரிந்து விடுகிறார்கள். இரண்டாம் உலகத்தில் அதிரடியானவர்களாக காதல் புரிகிறார்கள்.

இந்த உலகத்து ஆர்யா, யதார்த்தமாக இருக்கிறார். அந்த உலகத்து ஆர்யா ‘விக்’ வைத்திருக்கிறார் என்று நன்றாகவே தெரிகிறது. 60 கோடில (படத்தோட மொத்த பட்ஜெட்னு சொல்றாங்க) ஒரு 6000 ரூபாய்க்கு நல்ல ‘விக்’ வைக்கக் கூடாதா…

அதே போலத்தான் , இந்த உலகத்து அனுஷ்கா கொள்ளை அழகு. அந்த உலகத்து அனுஷ்கா, ஏதோ ரஷ்யன் படத்து நடிகை போலவே தெரிகிறார்.

படத்துல வேற முக்கியமான கதாபாத்திரங்களே இல்லை. அந்த ‘கடவுள்’ அம்மாவைத் தவிர.

தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக “இதர பாடல்கள் மற்றும் பின்னணி இசை” – அனிருத் என்ற கார்டு வந்தது இந்த படத்தில்தான் இருக்கும். இம்மாதிரியான பின்னணி இசை பிரமிக்க வைக்க வேண்டும். அதிலும், அந்த வித்தியாசமான சிங்கத்துடன் ஆர்யா சண்டை போடும் காட்சியில், தகர டப்பாவை உருட்டிய  சத்தம்தான் கேட்கிறது. இளையராஜா இசையமைச்ச ஒரு 100, இல்ல இல்ல…ஒரு 10 படம் பாருங்க அனிருத், பின்னணி இசை எப்படி இருக்கணும்னு…

செல்வா படங்களில் அதிகம் ரசிக்க வைப்பதே பாடல்கள்தான்…இந்த படத்தில் அதிலும் குறைதான்…கனிமொழியே…பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம்.

இரண்டாம்  உலகத்தின் பக்கபலமே ராம்ஜியின் ஒளிப்பதிவுதான். சும்மா சொல்லக் கூடாது…கிராஃபிக்ஸ் நிறைய மிக்ஸ் ஆகியிருந்தாலும், அந்த இரண்டாம் உலகம் ‘லொகேஷன்ஸ்’ கொள்ளை அழகு.

கிளைமாக்சில் ‘மூன்றாம் உலகத்திற்கு’ வேறு ஒரு அறிமுகம் வைக்கிறார்கள்.

வேறு எந்த உலகமும் வேண்டாம் செல்வராகவன், இந்த உலகத்திலேயே இன்னும் சொல்லப்படாத கதைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றைத் தொட்டு, எங்கள் மனசையும் மீண்டும் தொட வையுங்கள்…

தயாரிப்பு – பிவிபி சினிமாஸ்

தயாரிப்பு – பரம் வி. பொட்லூரி

எழுத்து, இயக்கம் – செல்வராகவன்

இசை – ஹாரிஸ் ஜெயராஜ்

இதர பாடல்கள் இசை, பின்னணி இசை – அனிருத்

ஒளிப்பதிவு – ராம்ஜி

படத்தொகுப்பு – கோலா பாஸ்கர்

கலை – கிரண்

நடனம் – கல்யாண், தினேஷ்

சண்டை – சுரா நானோபுஷ்விலி, ரஃப் ராஜசேகர்

மக்கள் தொடர்பு – ரியாஸ் அகமது

வெளியான தேதி – 22 நவம்பர் 2013

நடிப்பு – ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர்..,

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

சொல்லாததை எழுதுகிறார்கள் – சமந்தா வருத்தம்…

Most Popular