2014ம் ஆண்டு வெளிவந்த படங்களில் ஆச்சரியமான வெற்றியைக் கொடுத்த படம் ‘கோலி சோடா’.
பெரிய நடிகர்கள் இல்லாமல் சிறுவர்கள், சிறுமியர்களை வைத்து விஜய் மில்டன் இயக்கிய அந்தப் படம் குறிப்பிடத்தக்க வெற்றிப் படமாக அமைந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை அதே விறுவிறுப்புடன் கொடுத்திருக்கிறார் விஜய் மில்டன்.
எளியவர்களை வலியவர்கள் அழுத்தும் போது, எளியவர்கள் வீறு கொண்டு எழுந்தால் என்ன நடக்கும் என்ற ஒரு வரிக் கதைதான். ஆனால், அதிலும் பரபரப்பான, நறுக்கென்ற திரைக்கதையுடன் காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
இந்தப் படத்திலும் பெரிய நடிகர்கள் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களையும், நடிகைகளையும் வைத்து ‘கோலி சோடா’வை குபுக்கென பொங்க வைத்திருக்கிறார்.
பாரத் சீனி, வினோத், இசக்கி பரத் எளிமையான வேலையை செய்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் மூவரும் வலிமையான, அரசியல் பலம் கொண்டவர்களால் தனித் தனியாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்காமல் சிறிது காலம் மறைந்து பின்னர் திருப்பித் தாக்குகிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பாரத் சீனி, தாதாவிடம் கார் டிரைவராகவும், வினோத் ஆட்டோ ஓட்டுனராகவும், இசக்கி பரத் சிறிய ஓட்டலில் வேலை செய்பவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே நடிக்காமல் அவரவர் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகம் இல்லாத இவர்கள் ஒன்று சேர்ந்து அவர்களது எதிரிகளைத் தாக்கும் போது ‘பாட்ஷா’ படத்தின் லைட் கம்பம் காட்சிதான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அளவிற்கு பவர்புல்லான திருப்பித் தாக்குதல் அது.
பாரத் சீனியின் காதலியாக சுபிக்ஷா, இசக்கி பரத் காதலியாக கிரிஷா குரூப், தமிழ் சினிமாவில் தற்போதைக்கு இருக்கும் பக்கத்து வீட்டுப் பெண் தோற்ற கதாநாயகிகளின் பஞ்சத்தைத் தீர்த்து வைப்பார்கள். இருவரும் காதலர்கள் மீது காட்டும் அன்பு பேரன்பாக இருக்கிறது.
பாரத் சீனி, வினோத், இசக்கி பரத் மூவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக இருப்பவர் சமுத்திரக்கனி. போலீஸ் வேலையை விட்டுவிட்டு பார்மசி நடத்திக் கொண்டிருப்பவர்கள் இவர்களுக்கு நண்பனாக, அண்ணனாக, உறுதுணையாக இருந்து வழி நடத்துகிறார்.
படத்தில் மூன்று வில்லன்கள், மூவருக்கும் ஒரு கட்சியின் அரசியல் சாயத்தைப் பூசியிருக்கிறார் இயக்குனர். துறைமுகத்தையே தன் வசம் வைத்திருக்கும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், கவுன்சிலர் சரவண சுப்பையா, சாதிக் கட்சித் தலைவர் ஸ்டன் சிவா மூவருமே வில்லத்தனத்தில் ஊறியவர்களாகத்தான் தெரிகிறார்கள்.
ஒரு சில காட்சியில் வந்தாலும் கெத்து காட்டுகிறார் கௌதம் மேனன். கிளைமாக்சில் சமுத்திரக்கனிக்கும், கௌதம் மேனனுக்கும் இடையில் நடக்கும் அந்த டிவிஸ்ட் எதிர்பாராதது. ரோகிணி, ரேகா அம்மா கதாபாத்திரங்களில் சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.
அச்சு ராஜாமணியின் இசையில் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை மேலும் கூட்டுகிறது. ‘என் பொண்டாட்டி..’ பாடல் ஆட்டம் போட்டு ரசிக்க வைக்கிறது.
முதல் பாதியில் இருந்த திரைக்கதை அமைப்பு, கதை சொல்லும் பாணி, காட்சிகள் என அனைத்துமே முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. அது இரண்டாவது பாதியிலும் அதே அளவுடன் தொடர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.