தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பேய்ப் படங்களில் மற்றுமொரு பேய்ப் படம் ‘பலூன்’. புதிய கதை இல்லை என்றாலும் பயமுறுத்துவதில் எந்தப் பஞ்சமும் வைக்கவில்லை.
ஒரு பேய் வீடு, அந்த வீட்டில் இருக்கும் பேய், பேய்கள் அந்த வீட்டிற்குள் நுழைபவர்களை பயமுறுத்தும். அந்தப் பேய்க்கு ஒரு பிளாஷ் பேக். அதே பேய்ப் பட பார்முலாதான் இந்த ‘பலூன்’.
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஜெய், தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் பேய் படம் எடுப்பதற்கான கதையை எழுத முடிவு செய்கிறார். நண்பன் கொடுத்த தகவல்படி ஊட்டியில் இருக்கும் ஒரு பேய் வீட்டைப் பற்றி விசாரித்து கதை எழுத மனைவி அஞ்சலி, அண்ணன் மகன், உதவி இயக்குனர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி ஆகியோருடன் செல்கிறார். அங்கு சென்றதும் அண்ணன் மகனுக்குள் பேய் புகுந்து விடுகிறது. அதன் பின் அஞ்சலிக்குள்ளும் புகுந்துவிடுகிறது. அவர்களை பேயிடமிருந்து விடுவிக்கும் முயற்சியில் ஜெய் இறங்குகிறார். அதில் ஜெய் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்குரிய பெரிதாக எந்தக் காட்சிகளும் ஜெய்க்கு படத்தில் இல்லை. அஞ்சலியுடன் அழகாக ரொமான்ஸ் செய்து கொண்டே சாதாரணமா நடித்து விடுகிறார். கிளைமாக்சில் மட்டும் ஆக்ஷனில் அதிரடி காட்டுகிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அஞ்சலியை தமிழ் சினிமாவில் பார்ப்பது ஆறுதல். ஜெய்யை அநியாயத்திற்குக் காதலித்துத் தள்ளுகிறார் அஞ்சலி. பேய்ப் படத்தில் அஞ்சலி, ஜெய் காதல் காட்சிகள்தான் படத்திற்கு பெரிய ரிலாக்ஸ்.
படத்தை இடைவேளை வரை கலகலப்புடன் நகர்த்துகிறார் யோகி பாபு. அதன் பின் பிளாஷ் பேக்கில் வரும் ஜெய், அவருடைய காதலியாக வரும் ஜனனி ஐயர் என காதல், சாதி, மோதல், கொலை என வேறு தளத்திற்குக் கதை பயணித்து பின் பழி வாங்கலில் முடிகிறது.
யுவன்ஷங்கர் ராஜா படத்தின் டைட்டில் இசையில் இருந்தே மிரட்டலை ஆரம்பித்துவிடுகிறார். ஒளிப்பதிவும், அரங்க அமைப்பும், படத் தொகுப்பும் மேக்கிங்கில் நிறைவாக அமைந்துள்ளது.
எந்தப் புதுவிதக் காட்சிகளும் இல்லாத வழக்கமான பயமுறுத்தும் பேய்ப் படம்.