அய்யனார் வீதி – விமர்சனம்

படத்தின் தலைப்பே இது ஒரு கிராமத்துக் கதை என்பதை சொல்லிவிடும். கிராமத்துக் கதைகளுக்கே உரிய குடும்பப் பகை, எதிரிக் குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கும் நாயகன் என வழக்கமான அம்சங்களுடன் வந்துள்ள படம்தான் ‘அய்யனார் வீதி’.

ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அய்யனார் பொன்வண்ணனுக்கும், அந்த ஊரிலிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள வில்லன் குடும்பத்திற்கும் இடையே அதற்கு முந்தைய தலைமுறையிலிருந்தே பகை. பொன்வண்ணனின் அப்பாதான் வில்லன் குடும்பம் சாராயம் காய்ச்சியதாக அவர்களை ஊரிலிருந்து தள்ளி வைக்கிறார். இந்தத் தலைமுறையிலும் வில்லன் குடும்பத்தினருக்கு அய்யனாரைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.

அண்ணன், தம்பிகள் மூவர் பொன்வண்ணனை பல வழிகளில் சிக்க வைக்க முயற்சித்து தோல்வியடைகிறார்கள். கடைசியில் பொன்வண்ணன் மகளுடைய வாழ்க்கையையும் சீரழிக்க முயற்சிக்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதால் படத்தைப் பார்க்கும் ஆர்வம் ரசிகனுக்கு வரலாம். அவரும் அந்தக் கால ‘இது நம்ம ஆளு’ பாக்யராஜாகவே வருகிறார். ஆனாலும், வழக்கமான பாக்யிராஜ் டைப் காமெடி படத்தில் மிஸ்ஸிங்.

யுவன், சாரா ஷெட்டியை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனாலும், சாரா யுவனை உதாசீனப்படுத்துகிறார். இவர்களுடைய காதல் காட்சிகள் கூட படத்தில் எப்போதோதான் வருகிறது. சாரா ஷெட்டி பாக்யராஜின் மகள். ஆனால், இன்னொரு பக்கம் அய்யனார் பொன்வண்ணனின் மகள் சிஞ்சு மோகனும் யுவனைக் காதலிக்கிறார்.

படத்தில் இப்படி ஒரு முக்கோணக் காதல் இருந்தாலும் வில்லன் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் அதிகம் வருகின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகள் அடுத்தடுத்து வருகின்றன.

கிராமத்துக் கதையைக் கொடுக்க வேண்டும் என்று யோசித்த இயக்குனர் நல்ல திரைக்கதையையும், அழுத்தமான காட்சிகளையும் வைக்கவில்லை. ஒரு படம் எடுத்தால் போதும் என்ற ரீதியில் எடுத்திருப்பார் போலிருக்கிறது.

Read Previous

தலைவா…. – ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்த ராஜமௌலி

Read Next

3 நாளில் 500 கோடியைக் கடந்த ‘பாகுபலி 2’

Most Popular