அமரன் – விமர்சனம்

தமிழ் சினிமா பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் அதன் மக்களையும் பேசியே வந்திருக்கிறது. அந்த இடைவெளியில் கிழக்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களின் வறட்சி, வாழ்வாதார இழப்பு, அதிகார சுரண்டல் ஆகியவற்றை பின்னணியாக வைத்து ஆக்ஷனும் உணர்வும் கலந்த கதையைச் சொல்ல வந்திருக்கிறது இயக்குநர் திருஅருள் கிருஷ்ணாவின் அமரம். சமூகப் பின்னணியை மட்டும் பதிவு செய்யாமல், கமர்ஷியல் தளத்தில் ரசிக்க வைக்கும் முயற்சியாகவும் இப்படம் அமைந்திருக்கிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலைக் கிராமம் ஒன்றில் விவசாயம் பொய்த்துப் போன நிலையில், அம்மக்களின் பொருளாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சில செல்வாக்கு மிக்கவர்கள், குறைந்த கூலிக்கு அவர்களை செம்மரம் வெட்டுதல், கொலை உள்ளிட்ட தவறான வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கூலிப்படை நபரான நாயகன் ராஜன் தேஜஸ்வர், நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை அவர் கண்முன்னே கொலை செய்கிறார்.

தந்தையைக் கொன்றவரை தேடிப் பழிதீர்க்க முடிவு செய்யும் ஐரா அகர்வால், ஆதாரம் இல்லாத நிலையிலும் அவரைத் தேடிச் செல்கிறார். அவருடைய காதலரும், அவரது தந்தையான எம்.எல்.ஏ. நாகிநீடும் உதவ முன்வருகிறார்கள். அதன்படி ராஜன் தேஜஸ்வர் கண்டுபிடிக்கப்படுகிறார். கொலை வெறியோடு அவரை நெருங்கும் ஐரா, திடீரென மனம் மாறி அந்த முடிவைக் கைவிடுகிறார். இதனால் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகனால் அவருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்திலிருந்து அவரைக் காப்பாற்ற முயலும் நாயகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் காவல்துறை மற்றும் எம்.எல்.ஏ. ஆட்களால் பேராபத்து உருவாகிறது. அந்த ஆபத்திலிருந்து தப்பி நாயகியுடன் பயணிக்கும் ராஜன் தேஜஸ்வர், நாயகியையும் தன் ஊர் மக்களையும் காப்பாற்றினாரா என்பதை, தமிழ் சினிமாவில் அரிதாகவே பேசப்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அம்மக்களின் வாழ்வியலுடன் இணைத்துச் சொல்வதே அமரம்.

மேற்குத் தொடர்ச்சி மலையை அதிகம் காட்டிய தமிழ் சினிமாவில், கிழக்குத் தொடர்ச்சி மலை மக்களின் வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்யும் கதைக்களத்தை இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா ஆக்ஷன்-கமர்ஷியல் பாணியில் கையாண்டு ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகனாக அறிமுகமாகும் ராஜன் தேஜஸ்வர், முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தாலும், பார்வை மூலமே பலவித உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். ஆக்ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கும் அவர், கரடுமுரடான பழங்குடியினர் பாத்திரத்தில் இயல்பாகப் பொருந்தியிருக்கிறார். அளவான நடிப்பும் உடல்மொழியும் சேர்ந்து அருகன் என்ற கதாபாத்திரத்துக்கு முழு நியாயம் செய்திருக்கிறது.

நாயகியாக நடிக்கும் ஐரா அகர்வால், துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். தந்தையின் கொலைக்குப் பழிதீர்க்க கொலை வெறியோடு நாயகனைத் தேடும் நிலையிலிருந்து, அவர் கிடைத்தும் கொல்ல முடியாமல் தடுமாறும் காட்சியில் அவர் நடிப்பு தனித்து நிற்கிறது.

பழங்குடியின மூத்தவராக ஜார்ஜ் மரியான், பழங்குடி மக்களை கூலிப்படையாகப் பயன்படுத்தும் சாய் தீனா, எம்.எல்.ஏ.வாக நாகிநீடு, மேலும் கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோரும் தத்தம் பாத்திரங்களுக்கு பொருத்தமாகத் தேர்வாகியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பரத் குமார், கிழக்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களின் வறட்சியையும், மகிழ்ச்சியற்ற மக்களின் முகங்களையும் இயல்பாகக் காட்டி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கிய விதம் மிரட்டலாக இருக்கிறது.

மிக்கி ஜெ. மேயர் இசையில் பாடல்கள் கதைக்களத்துக்கு ஏற்றபடியும் புதுமையாகவும் அமைந்திருக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுவதோடு, திரைக்கதையின் வேகத்தையும் விறுவிறுப்பையும் உயர்த்தியிருக்கிறது.

படத்தின் தொடக்கத்திலேயே பார்வையாளரை கதைக்குள் இழுக்கும் விதத்தில் காட்சிகளைத் தொகுத்திருக்கும் ஆர். ஸ்ரீராமர், பெரும்பாலான காட்சிகளையும் சுருக்கமாக இணைத்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். கிழக்குத் தொடர்ச்சி மலை பற்றிய தகவலும் அம்மக்களின் வாழ்வியலும் எளிமையாகச் சொல்லப்பட்டிருந்தாலும், மனதில் ஆழமாகப் பதிகின்றன.

எழுதி இயக்கியிருக்கும் திருஅருள் கிருஷ்ணா, ஆபத்தில் இருக்கும் நாயகியைக் காப்பாற்றும் நாயகன் என்ற வழக்கமான கருவை, தமிழ் சினிமாவில் பெரிதாகப் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைத்து சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.

செம்மரம் வெட்டுபவர்கள் மற்றும் கூலிப்படையாகச் செயல்படுபவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன என்பதை சுவாரஸ்யமாக விரித்து முதல் பாதியை வேகமாக நகர்த்தும் இயக்குநர், இரண்டாம் பாதியில் நாயகியைக் காப்பாற்றும் நாயகனின் உணர்வுப்பூர்வமான பயணத்தையும், அவரைத் துரத்தும் பிரச்சினைகளையும் எதிர்பாராத திருப்பங்களோடு காட்டி பார்வையாளரை படத்துடன் ஒன்ற வைக்கிறார்.

சொல்லப்படாத ஒரு சமூகத்தின் வாழ்வியலை பின்னணியாக வைத்துக் கொண்டு காதல், காமெடி, ஆக்ஷன் போன்ற கமர்ஷியல் அம்சங்களை அளவாகக் கையாண்டிருக்கும் திருஅருள் கிருஷ்ணா, பார்வையாளரை முழுமையாகத் திருப்திப்படுத்தும் ஒரு படத்தைத் தந்திருக்கிறார்.

Read Previous

டாக்ஸிக் – சென்னையில் நடந்த விழா

Read Next

டாக்ஸிக் – விமர்சனம்