விரைவில் வெளியாக உள்ள ‘சண்டக்காரி’

த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், விஜய் நடித்த ‘மதுர’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘சண்டக்காரி’.

காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.

அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.

இவர்களுடன் ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். அம்ரீஷ் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன் அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.

Read Previous

‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு ஆரம்பம்

Read Next

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘பிக்காஸோ’