தமிழ் சினிமாவில் மாறுபட்ட நடிகர் எனப் பெயரெடுத்தவர் விக்ரம். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்‘ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது.
விக்ரம் அடுத்து நடிக்கும் அவரது 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.
எச்ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரியா ஷிபு இப்படத்தைத் தயாரிக்கிறார். ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா’ படங்களை இயக்கிய எஸ்யு அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தின் அறிவிப்புக்கென ஒரு 3 நிமிடம் ஓடக் கூடிய திரைப்படம் போன்ற காட்சியைப் படமாக்கி அதை யு டியுபில் வெளியிட்டு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு இரண்டு பேரை விரட்டி வந்து அடிக்கும் ஒரு சாதாரண கடை வியாபாரியாக விக்ரம் அந்தக் காட்சியில் நடித்துள்ளார். 3 நிமிடம் 43 வினாடிகள் ஓடக் கூடிய அந்தக் காட்சியே மிரட்டலாக உள்ளது.
படத்தையும் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக எதிர்பார்க்கலாம் என்று தோன்ற வைக்கிறது. படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.