விடுதலை – நன்றி சொல்ல வாத்தையே இல்லை, சூரி நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூரி.

தற்போது ‘அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், உடன்பிறப்பே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அவற்றோடு வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

முதல் முறையாக கதையின் நாயகனாக நடிப்பது பற்றி சூரி கூறுகையில்,

“இறைவன் அருளாலும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆதரவாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் ஓரமாக வந்துவிட மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறேன். சின்ன வேடங்களில் நடிக்கும் போது நமக்கும் கைதட்டல் கிடைத்துவிடாதா என்று ஆசைப்பட்டிருக்கிறேன். காமெடியனாக பேர் வாங்க விரும்பினேன். இவை அனைத்துமே நடந்தது. 

கதையின் நாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் பல ஆண்டுகளாக வந்து கொண்டுதான் இருந்தன. காமெடியனாக கிடைத்த மக்கள் ஆதரவை தவறாக பயன்படுத்தி விடக்கூடாதே என்று தவிர்த்து வந்தேன். காமெடியன் நாயகனாகும்போது காமெடி கதையில் தான் நடிக்க வேண்டும் என்பது கட்டாயமா ?, அதைத்தான் பிற நடிகர்களுடன் நடிக்கும்போதே பண்ணுகிறோமே என்று நினைத்திருக்கிறேன். 

எனவே அப்படி களம் இறங்கும்போது, நம் நடிப்பை வெளிக்கொண்டுவரும், கவனிக்க வைக்கும் கதையாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். என் இன்னொரு பக்கத்தை காட்டும் கதைக்காக காத்திருந்தேன். ஆனால் அது வெற்றி அண்ணனின் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. 

அழைப்பு வந்ததே கனவு போல இருந்தது. ‘அசுரன்’ படத்துக்கு முன்பு பேசியது. ‘அசுரன்’ படம் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகர்கள் படங்கள் வரிசை கட்ட நம் படம் தாமதம் ஆகலாம் என நினைத்தேன். ஆனால் வெற்றி அண்ணன் இந்த படத்தை தொடங்கியது அவரது பெரிய மனதைக் காட்டியது.  அவர் அழைத்ததே ஆச்சரியமாக இருக்க இன்னொரு ஆச்சரியமாக உடனே அட்வான்சைக் கொடுத்தார். 

அடுத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிப்பு என்றதும் மகிழ்ச்சி ஆனேன். முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் பகிர்ந்தேன். இதற்கு முன்னர் எவ்வளவு சம்பளம் வாங்கி இருந்தாலும் இது பல கோடிக்கு சமம் அல்லவா ?, நேராக சாமி படத்தின் முன்பு வைத்துவிட்டு குடும்பத்திடம் சொன்னேன். மேனேஜருக்கே அதன் பின்னர் தான் சொன்னேன். 

‘விடுதலை’ தொடங்கியதை விட இப்போது இன்னும் பெரிய படமாகி விட்டது. இந்த படத்தில் ஒரு நடிகனாக இருப்பதே பெரிய பாக்கியம் தான். வெற்றி அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. அவரது அயராத உழைப்பால் மிகச் சிறந்த படமாக தயாராகி வருகிறது. 

படத்தின் விளம்பரம் பேப்பரில் வந்த அன்று முந்தைய இரவு தூக்கமே வரவில்லை. சிறு வயதில் தீபாவளிக்கும் முதல் நாள் தூங்காமல் விழித்திருப்போமே அதுபோன்ற மனநிலையில் இருந்தேன். 

45 ஆண்டுகளாக இசைக்கே ராஜாவாக விளங்குபவரின் இசையில் நடித்தது என் வாழ்நாள் பாக்கியம். அவரை சந்தித்த போதும் மெய்மறந்தேன். அதேபோல் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது நான் செய்த புண்ணியம்,” என் மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
 

Read Previous

கலர்ஸ் தமிழ் – நாளை ‘குபேரன், கோலி சோடா’ படங்கள் ஒளிபரப்பு…

Read Next

டிக்கிலோனா – டிரைலர்

Most Popular