சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் நடிகை ராதிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் சிவகுமார் முருகேசன் படம் பற்றி கூறியதாவது,
“இயக்குனர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். இந்தக் கதையை கேட்ட பிறகு சிவகார்த்திகேயன் சார், கதையில் எந்த சமரசமும் இல்லாமல் நினைத்தபடி எடுக்குமாறு ஊக்கமளித்தார். அதன்படி படம் உருவாகியுள்ளது.
உசிலம்பட்டி அருகே உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது பெண்ணும், அவரது குடும்பத்தையும் மையமாகக் கொண்ட கதை இது. அந்தப் பகுதியின் பழக்க வழக்கங்கள், பேச்சு நடை, குடும்ப உறவுகள் மற்றும் சமூகச் சடங்குகளை நகைச்சுவை கலந்த முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். படம் மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும்.
பவுனுத்தாயி என்ற 75 வயது பெண் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். அவருடைய மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், மகளாக ரேய்ச்சல் ரெபேகா, மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். கிராமத்தின் முக்கிய நபராக முனீஷ்காந்த் நடித்துள்ளார். மேலும் இளவரசு, ஜார்ஜ் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கலந்து நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு விவேக் விஜயராஜ், எடிட்டிங் சான் லோகேஷ், கலை இயக்கம் ராமு தங்கராஜ், இசை நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் செய்துள்ளனர். கிராமத்து வாழ்க்கை, பெண்கள் முன்னேற்றம், குடும்பத்தின் மதிப்பு ஆகியவற்றை மனமகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறோம்,” என்றார்.
பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் வீடியோ முன்னோட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.