விஜய் டிவியில் முற்றிலும் புத்தம் புதிய காதல் காவியமாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இந்தத் தொடர் விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தின் மூலம் இவர்களின் வாழ்கை தலைகீழாக மாறுகிறது.
விக்ரம் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. ஒரு பயணத்தின் போது சத்யா என்ற பெண்ணைப் பார்க்கிறார். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். விதியின் காரணமாக இருவரும் அதன் பிறகு சேர முடியாமல் போகிறது.
மற்றொருப்பக்கம் போலீஸ் அதிகாரியின் ஒரே செல்ல மகள் மற்றும் ஊர்க்காரர்கள் அனைவருக்கும் செல்ல மகளுமான பெண்- சரண்யா. சூழ்நிலை காரணமாக, அதே ஊரில் உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விக்ரம் தான், தனது தந்தையின் சாவிற்கு காரணம் என்று ஒரு முடிவுக்கு வருகிறார்.
அதனால், ஊர்க்காரர்களும் சரண்யாவின் தந்தை சாவிற்கு காரணமாக அமைந்த விக்ரம்தான் இனி, சரண்யாவின் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி சரண்யாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர். அதனால், வேறு வழியில்லாமல் விக்ரம், சரண்யாவை மணக்கிறார்.
ஒரு பக்கம் மனைவி சரண்யா, மற்றொரு பக்கம் முன்னாள் காதலி சத்யா, தன்னுடைய கூட்டுக் குடும்பம் என தவித்து நிற்கிறார் விக்ரம். இதுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரின் கதை.
‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்து புகழ் பெற்ற அமித் பார்கவ் தான் இந்தக் கதையில் விக்ரமாக நடிக்கிறார். ‘புதிய தலைமுறை’ டிவியில் செய்தி வாசிப்பாளர் ஆக இருந்த சரண்யா இந்தத் தொடரின் மூலம் டிவி தொடர் நாயகியாக அடியெடுத்து வைக்கிறார். பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா, சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தத் தொடரை அப்துல் ஹபீஸ் இயக்குகிறார். இளையவன் இசை அமைக்கிறார்.
வரும் அக்டோபர் 9 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடர் ஒளிபரப்பாக உள்ளது.