சூர்யா நடிக்கவுள்ள படத்தினை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘ப்ரூஸ் லீ’. இந்தப் படம் போதிய வரவேற்பினை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து ‘விலங்கு’ என்ற வெப் தொடரினை இயக்கினார். இந்த தொடரின் மூலம் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இயக்குநராக மாறியிருக்கிறார் பிரசாந்த் பாண்டிராஜ்.
தற்போது தனது படத்துக்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, சூர்யா நடிக்கவுள்ள படத்தினை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாகவும், அதனை 2டி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விசாரித்த போது, “சூர்யாவுக்காக பிரசாந்த் பாண்டிராஜ் கதை உருவாக்கி இருப்பது உண்மைதான். ஆனால் இன்னும் சூர்யா – பிரசாந்த் பாண்டிராஜ் சந்திப்பு நடைபெறவே இல்லை. கதை விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மூலம் எப்படியோ தகவல் வெளியாகியுள்ளது” என்று தெரிவித்தார்கள்.