‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தை கலைப்புலி தாணு வழங்கும் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று படத்தின் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். “அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் படத்தைத் தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது சூர்யாவின் 40வது படம். சூர்யா தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே வெளியாக உள்ளது. ‘அசுரன்’ படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. விஜய்க்கும் அவர் கதை சொல்லியிருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் வெற்றிமாறன், சூர்யா கூட்டணி இணைகிறது என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால் விஜய் படம் பற்றிய தகவல்கள் பொய்யாகிப் போனது. வெற்றிமாறன் இதுவரை இயக்கிய “பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன்” ஆகிய படங்களில் 4 படங்களில் தனுஷ் தான் நாயகன். அவரைத் தவிர வேறு ஒரு முன்னணி நடிகருடன் அவர் இணைவது இதுவே முதல் முறை.