ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தினை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தக் கொடுத்த பேட்டியொன்றில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து பேசியுள்ளார் விஜய் சேதுபதி. அதில் “இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் ‘சூப்பர் டீலக்ஸ்’ தேர்வாகாத போது மனமுடைந்துவிட்டேன்.
அதற்குப் பதிலாக ரன்வீர் சிங் நடித்த ‘கல்லி பாய்’ தேர்வானது. இதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது.
நான் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்காமல் இருந்திருந்தாலும், ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகி இருக்க விருப்பம் தெரிவித்திருப்பேன்.
அந்தச் சமயத்தில் சில விஷயங்கள் நடைபெற்றன. அது குறித்து இப்போது பேச விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
2019-ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
ஒரே நாளில் நடைபெறும் 4 வித்தியாசமான சம்பவங்களின் தொகுப்பே இந்தப் படம். வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெறவிட்டாலும், விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்தது.