2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் ‘சூரரைப் போற்று’.
இப்படம் கடந்த வருட தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படத்தை தற்போது உலக அளவில் மதிக்கப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கலந்து கொள்ள இடம் பெறச் செய்துள்ளார் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்.
இந்த முறை கொரோனா அச்சுறுத்ல் காரணமாக ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.
அந்த வகையில் பொதுப்பிரிவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ‘சூரரைப் போற்று’ படம் போட்டியிடுகிறது.
இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் 'சூரரைப் போற்று' படம் திரையிடலுக்கான அகாடமி திரையிடல் அறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.
அதில் தேர்வாகி பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து விருதுக்கான போட்டியிலும் இப்படம் இடம் பெறும்.
“உலகத் திரையுலகினரின் பாராட்டுக்களை அள்ளிய 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்,” என்கிறார் படத்தின் இனை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்