அட்லியின் உழைப்பைப் பார்த்து இயக்குநர் ஷங்கர் பெருமிதம் கொண்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. விமர்சனங்கள் மிகவும் மோசமாக இருந்தாலும், வசூலை குவித்து வருகிறது.
‘இந்தியன் 2’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்துள்ள பேட்டியில் இயக்குநர் ஷங்கர், தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி குறித்து பெருமையாக பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது:
“‘ஜவான்’ படத்திற்காக அட்லி போட்டிருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் அவ்வளவு மெனக்கிட்டு இருக்கிறார். சாதாரணமாக எல்லாம் இந்த வெற்றி வராது, அவ்வளவு உழைப்பு தெரிகிறது. ரொம்ப பிரமாதமாக பண்ணியிருக்க என்று அழைத்து பாராட்டினேன். அவருடைய வெற்றி ரொம்ப சந்தோஷமாக, பெருமையாக இருக்கிறது. என்னுடைய பையன் வெற்றியடைந்தால் எப்படி பெருமையாக இருக்குமோ, அந்தளவுக்கு பெருமையாக இருக்கிறது”
இவ்வாறு ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் அட்லி. அவர் இயக்கத்தில் வெளியான 5 படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றவை. ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.