சசிகுமார் நடிக்கும் புதிய குடும்பத் திரில்லர்

டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 22-வது தயாரிப்பாக உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தைப் பிரபல கன்னட இயக்குநரும் பாடலாசிரியருமான ஹரி சந்தோஷ் இயக்குகிறார்.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் & மீடியா எல்.எல்.பி. நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஆர். ரவீந்திரன், சுல்தான் ஜசானி, சேத்தன் தியோலேகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சுவாசிகா, நரேன், அஞ்சலி நாயர், நந்திதா ஸ்வேதா, ஹரிஷங்கர், ஹரீஷ் பேரடி, தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக், வசந்தி குரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஹரி சந்தோஷ், குடும்ப உணர்வுகளுடன் திரில்லர் அம்சங்களும் கலந்த புதுமையான கதையாக இது உருவாகவுள்ளதாகத் தெரிவித்தார். தமிழில் தனது முதல் படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் சசிகுமாருடன் இணைந்து இயக்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிருஷ் ஜே. நாக்ரேச்சா இணை தயாரிப்பாளராகவும், சஞ்சய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சான் லோகேஷ் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை துரைராஜ் கவனிக்கிறார். பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதுகிறார். வசனத்தை மந்த்ரா எழுதியுள்ளார்.

சென்னையில் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகளை விரைவில் நிறைவு செய்து படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

ஹன்சா என்டர்டெயின்மென்ட் புதிய அறிவிப்பு

Read Next

நம்பிக்கை தரும் ‘ஹைக்கூ’ – ஏகன்