யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்லூரி மாணவனாகத் தொடங்கி, முதிர்ச்சியடைந்த குடும்பத் தலைவனாக மாறும் இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து நடிகர் ஏகன் கூறுகையில், “கல்லூரி மாணவனாக இருந்து முதிர்ச்சியடைந்த குடும்பத் தலைவனாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்தது சவாலாக இருந்தது. ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் இருவரும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர். சித்து குமாரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். காதல், நகைச்சுவையைத் தாண்டி ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் பல உணர்வுப்பூர்வமான அம்சங்கள் இப்படத்தில் உள்ளன. ‘ஹைக்கூ’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று நம்புகிறேன்” என்றார்.
இப்படத்தில் அதிர்ச்சி அருண், சுப்பிரமணியன் சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பி, இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.