விஜயதசமியை முன்னிட்டு, அக்டோபர் 20-ம் தேதி ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் OTT தளங்களுக்கான சீரிஸ்கள் மற்றும் குறுந்தொடர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், திரைப்படங்கள், டிஜிட்டல் சீரிஸ்கள் மற்றும் பிராண்டுகளுக்கான விளம்பரப் படைப்புகள் எனப் பல்வேறு துறைகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கான தயாரிப்புப் பணிகளை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ருதி சுவாமி கூறுகையில், புதுமையான கதைகள், பல்வேறு ஜானர்கள் மற்றும் திறமையான படைப்பாளிகளின் கூட்டணியில், மொழி மற்றும் கலாசார எல்லைகளைக் கடந்து ரசிகர்களைச் சென்றடையும் படைப்புகளை உருவாக்குவதே நிறுவனத்தின் நோக்கம் என்றார்.
மற்றொரு இயக்குநரான சித்தார்த் சுவாமி கூறுகையில், குறுகிய காலத்தில் தயாரிப்புக் குழுவை விரிவுபடுத்தி, ஒரே நேரத்தில் பல சீரிஸ்களை உருவாக்கும் திறனை வளர்த்துள்ளதாகத் தெரிவித்தார். தரத்தில் சமரசம் செய்யாமல், திட்டமிட்ட காலத்திற்குள் தயாரிப்புகளை நிறைவு செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
திரைப்படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தும் இந்நிறுவனம், முதல் கட்டமாக ஒரு மலையாளப் படம், மூன்று தமிழ்ப் படங்கள் என நான்கு திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் CEO சுஜாதா நாராயணன் வெளியிட்டுள்ள தகவலின்படி, இப்படங்கள் உள்ளூர் கதைக்களங்களையும் மனிதர்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு உருவாகவுள்ளன.
நான்கு திரைப்படங்களின் விவரங்கள்:
மலையாளம் – காமெடி டிராமா: இளம் வயதினரின் வாழ்க்கை மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட இப்படத்தை இந்து வி.எஸ். எழுதி இயக்குகிறார்.
தமிழ் – இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்: சர்ஜுன் கே.எம். மற்றும் ஸ்ரீஹரி ஜெகநாதன் இணைந்து கதை எழுத, சர்ஜுன் கே.எம். இப்படத்தை இயக்குகிறார்.
தமிழ் – ஸ்போர்ட்ஸ் டிராமா: விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தை அருண்பிரகாஷ் எழுதி இயக்குகிறார். இது இவரது முதல் திரைப்படமாகும்.
தமிழ் – காமெடி டிராமா: இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படத்தை விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்குகிறார்.
இப்படங்களுக்கான நடிகர்கள் தேர்வு மற்றும் அடுத்தகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டு படங்களின் முன்தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 2026 முதல் தொடங்கவுள்ளன.
திரைப்படங்கள், சீரிஸ்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சி விளம்பரங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாகும் விளம்பரங்கள், பிராண்ட் ஃபிலிம்கள் மற்றும் மொபைல் பார்வைக்கான வெர்ட்டிக்கல் டிராமாக்கள் ஆகியவற்றையும் ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது.
ஆர்கே சுவாமி ஹன்சா குழுமத்தின் தலைவர் சீனிவாசன் சுவாமியின் வழிகாட்டுதலில் செயல்படும் இந்நிறுவனம், OTT தளங்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து தனது தயாரிப்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
மூன்று மொழிகளில் டிஜிட்டல் படைப்புகள், நான்கு திரைப்படங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான புதிய முயற்சிகள் எனப் பல்வேறு தளங்களில் விரிவடைந்து வரும் ஹன்சா என்டர்டெயின்மென்ட், இந்தியப் பொழுதுபோக்குத் துறையில் வலுவான இடத்தைப் பிடிக்கும் நோக்கில் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.