ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம், அக்டோபர் 21-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் எம். குரு இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’, ‘காளிதாஸ்’ படங்களின் இரு பாகங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்த பரத் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாள நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), மீனாட்சி தினேஷ், ரக்ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள் மற்றும் சென்டிமென்ட் அம்சங்களுடன் அனைத்து வயதினரும் ரசிக்கும் கமர்ஷியல் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகிறது.
இப்படத்திற்கு எஸ்.ஆர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அருள் இ. சித்தார்த் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தினேஷ் காசி சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார்.
சென்னை மற்றும் கேரள மாநிலம் ஆலப்புழாவில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.