தமிழ் சினிமாவில் புதிய தயாரிப்பு நிறுவனமாக சசிகலா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து நிலைகளையும் ஒருங்கே சொந்தமாகக் கொண்டிருக்கும் ஸ்டுடியோவை இந்நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் அடுத்தடுத்து மூன்று தமிழ்த் திரைப்படங்களை வெளியிட உள்ளது. முதல் வெளியீடாக ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘கா’, அடுத்து கிஷோர் நடிப்பில் ‘ட்ராமா’, அதற்கடுத்து புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ’லாகின்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இப்படங்களின் டிரைலர் வெளியீட்டு விழாவும், இந்நிறுனத்தின் துவக்கவிழாவும் நேற்று இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில் சசிகலா புரொடக்ஷன்ஸ் சார்பில் சலீம் பேசுகையில்,
இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். படைப்புகளைப் பற்றி குழுவினர் கூறுவார்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
‘கா’ பட இயக்குநர் நாஞ்சில் பேசுகையில்,
இந்தப் படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம். இந்தப் படத்திற்கு நடிகர் சலீம் கௌஸ் மிகப்பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி.
‘கா’ பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசுகையில்,
ரொம்பவும் சென்ஸிடிவான ஒரு கதை. இதில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை தான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை. லாக்டவுன் வந்ததால் இதில் நிறைய உழைக்க முடிந்தது. மொத்த படத்தில் மூன்று பக்கம் தான் வசனம் இருக்கும். கமல் சாரின் பேசும் படத்திற்குப் பிறகு நிறைய மௌனம் இருக்கும் படம். என் முழு உழைப்பைத் தந்துள்ளேன். ஜான் மேக்ஸ் இதனை முழு அர்ப்பணிப்புடன் எடுத்தார். அவரின் எண்ணத்திற்கு பலனாக ஆண்டனி தாஸ் வந்துள்ளார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும், நன்றி.
தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசுகையில்,
சினிமாவில் சின்ன படம், பெரிய படம் என பிரிக்கத் தேவையில்லை. ரிலீஸுக்கு பின் தான் ஒரு படம் சின்ன படமா பெரிய படமா எனத் தெரியும். ‘மைனா’ ரிலீஸான பிறகு தான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்குப் பிறகு தான் அதை முடிவு செய்ய வேண்டும். ‘கா’ படம் மிக நன்றாக இருக்கிறது. ஆண்டனி தாஸ் இந்தப் படங்களை பார்த்து வாங்கியிருக்கிறார் அவருக்கு இந்தப்படங்கள் பெரிய லாபத்தைத் தரும், நன்றி.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா பேசிசுகையில்,
திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள். மூன்று சின்ன படங்களை ஒருத்தர் வாங்குகிறார் என்றார்கள், கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இப்போது தான் சின்ன படங்கள் என்று ஒதுக்குகிறார்கள். பெரிய படங்கள் இந்த காலத்தில் ‘பிரேக் ஈவன்’ என்று தான் போய்க் கொண்டுள்ளது. திட்டமிட்டு செய்தால் சின்னப் படங்கள் பெரிய வெற்றியைப் பெறும். ஜான் மேக்ஸ் எடுத்த முதல் படம் மிகப் பெரும் வெற்றி. ஆனால் அவர் ஏன் ஜெயிக்கவில்லை. அவர் இடையில் நிறைய சின்ன படங்கள் செய்தார். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். சின்ன படங்களுக்கு ஆதரவு தரும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப் படங்கள் உங்களுக்கு பெரிய வெற்றியைத் தருமென வாழ்த்துகிறேன். தேர்தலில் ஜெயித்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது. இது மாற வேண்டும். சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும். இந்த படங்கள் அனைத்தும் ஜெயிக்க வாழ்த்துகிறேன், நன்றி.
‘ட்ராமா’ இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசுகையில்,
தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப் படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான், ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி
‘ட்ராமா’ பட நடிகை காவ்யா வெல்லு பேசுகையில்,
இது எனது முதல் படம், இந்தப் படத்தின் மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன். இது ஒரு சிங்கிள் ஷாட் மூவி என்பதால் பிராம்ப்டிங் அஸிஸ்டெண்ட் இருக்க மாட்டார்கள், ரீடேக் போக முடியாது. ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். மதுரை பெண்ணாக நடித்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.
தயாரிப்பாளர் ஆண்டனி ராஜ் பேசுகையில்,
சசிகலா புரடக்சன்ஸ் ஆண்டனி தாஸ் மற்றும் சலீம் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். உண்மையில் படம் ஆரம்பித்து மூன்று வருடங்களாக அநாதையாக இருந்தோம். எங்கள் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள், அவர்களுக்கு நன்றி.
‘லாகின்’ திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசுகையில்,
எங்கள் தயாரிப்பாளர் ஜேகே மற்றும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. இரண்டு மணி நேரம் உங்களை சுவாரசியப்படுத்தும் ஒரு கதையை உண்மையான அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம்.
நடிகர் வினோத் கிஷன் பேசுகையில்,
‘லாகின்’ படம் லாக்டவுன் முடிந்து ஷு போன படம். நாம் தெரியாமல் செய்யும் சின்ன தப்பு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குவது தான் இந்தப்படம். மிக சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஜேகே மற்றும் வெளியிடும் சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் பெரிய நன்றிகள்.
சசிகலா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசுகையில்,
சசிகலா புரொடக்ஷன்ஸ் சார்பில் பல தமிழ்ப் படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் செய்து வருகிறோம். நான் பல படங்களை பார்த்து வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா ?, நாம் ஜெயிப்போமா ?, என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரொடக்ஷன்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இரண்டு மணி நேரம் ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்து படங்களும் பெரிய படம் தான். எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அளிப்போம். இந்த மூன்று படங்களை எப்படி வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்ற ரகசியம் தெரியும். இந்தப்படங்கள் கண்டிப்பாக வெற்றியைப் பெறும். இப்படங்களுக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.