இந்திப் படம் இயக்கவிருப்பதை உறுதிச் செய்துள்ளார் பா.ரஞ்சித்
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தினை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
‘தங்கலான்’ படத்திற்குப் பிறகு கார்த்தி படத்தினை இயக்கவுள்ளார் என்று செய்திகள் உலா வருகின்றன. அதே போல் ‘சார்பட்டா பரம்பரை 2’ படமும் அறிவிப்போடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, இந்திப் படம் இயக்கவிருப்பதை உறுதிச் செய்துள்ளார் பா.ரஞ்சித். இந்திப் படம் இயக்கவுள்ளதாகவும், அதன் நாயகன் யாரென்று உறுதியானவுடன் அறிவிப்பு வரும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்களை பா.ரஞ்சித் தெரிவிக்கவில்லை.
முன்னதாக ‘பிர்சா முண்டா’ வாழ்க்கை வரலாற்றை இந்தியில் இயக்குவதற்காக நீண்ட மாதங்கள் பணியாற்றினார் பா.ரஞ்சித். பின்பு அந்தப் படம் கைவிடப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.