புகைப்படங்கள் லீக்: ‘ராமாயணம்’ படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்

படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியானதால், ‘ராமாயணம்’ படப்பிடிப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, பாபி தியோல், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த முதற்கட்ட பணிகள் முடிந்து, மும்பையில் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

இந்தப் படப்பிடிப்பில் லாரா தத்தா மற்றும் அருண் கோவில் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த தளத்திலிருந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனென்றால் 3 பாகங்கள் திட்டமிடல், பெரிய முதலீடு, பெரும் நடிகர்கள் என பலருடைய உழைப்பு, முதலீடு இதில் சம்பந்தப்பட்டுள்ளது. இதனால் படங்கள் எப்படி வெளியானது என்று விசாரணை தொடங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி இனி படப்பிடிப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இனி எந்தவொரு பெரிய நடிகராக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்திற்குள் அவருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய உதவியாளர், மேலாளர் என யாருக்கு அனுமதி கிடையாது என கூறிவிட்டார்கள். படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே யார் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தளத்திற்குள் நடிகர்களுக்கு மட்டுமே அனுமதி.

மேலும், நடிகர்களுக்கும் தொலைபேசி அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கான புகைப்படங்கள் யாவுமே படக்குழுவினர் எடுப்பார்கள். அவை வெளியிடலாம் என்று படக்குழுவினர் தீர்மானித்தால் கொடுப்பார்கள். இல்லையென்றால் விளம்பரப்படுத்தும் சமயத்தில் கொடுக்கவுள்ளனர்.

இந்தியாவில் இந்த மாதிரியான கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட முதல் படம் இது எனத் தெரிகிறது.

Read Previous

டபுள் டக்கர் – விமர்சனம்

Read Next

எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படம்

Most Popular