சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.
திரைப்படங்கள் வழக்கமாக தியேட்டர்களில் மட்டும்தான் வெளியாகும். டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஓடிடி தளங்கள் எனப்படும் இணைய வழியில் திரைப்படங்களைப் பார்க்கும் முறை புதிதாக வந்தது.
பைரஸி இணையதளங்கள் என்பவை திருட்டுத்தனமாக படங்களை எடுத்து அவர்களில் இணையதளங்களில் வெளியிடும். ஆனால், தயாரிப்பாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் திரைப்படங்களை வாங்கி ஓடிடி தளங்களில் வெளியிடும் முறை இந்தியாவிலும் அறிமுகமானது.
அதில் அமேசான் பிரைம் நிறுவனம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பல புதிய திரைப்படங்களை தியேட்டர்களில் ஓடி முடித்த பின்னும், ஓடிக் கொண்டிருக்கும் போது அவர்கள் வாங்கி தங்களது தளங்களில் வெளியிட்டார்கள்.
இப்போது முன்னணி நடிகையான ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பாகவே நாளை அவர்களது தளத்தில் வெளியிடுகிறார்கள்.
இது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவறாகத் தண்டிக்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை நேர்மையான வழக்கறிஞரான ஜோதிகா விடுவிக்க எடுக்கும் முயற்சிதான் இந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் கதை.
இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாவது குறித்து படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, “எந்தவொரு படமும் வெளியிடப்படும்போது, பார்வையாளர்களை சிந்திக்க அல்லது விவாதிக்க வைக்கும் விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஜோவின் திரைப்படங்கள் சமூகத்தின் நல்வாழ்வுக்காக அதை மீண்டும் மீண்டும் செய்துள்ளன. படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தவுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நானும் த்ரில்லர் படங்களின் மிகப்பெரிய ரசிகன், இந்தப் படம், பார்வையாளராகவும் தயாரிப்பாளராகவும் என்னை திருப்திப்படுத்தி உள்ளது. 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் இப்படத்தை எடுத்துச் செல்லும் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறியுள்ளார்.