லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்க, சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத் ராம் தயாரிப்பில், அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பன்னிக்குட்டி’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கே பேசுகையில்,
‘பன்னிக்குட்டி’ எனக்கு முக்கியமான படம், தொடர்ந்து சீரியஸான படங்களை செய்து கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்த படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை.
அறிமுக நாயகி லட்சுமி பிரியா பேசுகையில்,
இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணிபுரிந்தது பெரிய அனுபவம். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை திரையில் அழகாகக் கொண்டுவர ஒளிப்பதிவாளர் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் சிறப்பான பாடல்களைக் கொடுத்துள்ளார்கள். இது ஒரு நேர்மையான படம். எங்கள் படம் முழுமையாகத் தயாராகிவிட்டது, அதை பார்வையாளர்களிடம் நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்.
தயாரிப்பாளர் ஷமீர் பேசுகையில்,
படத்தைத் தியேட்டருக்குக் கொண்டு வர உதவிய லைகா புரடக்சனுக்கு நன்றி. சிறிய படங்களுக்கு, திரைக்கதை நன்றாக இருந்தால் தான், பெரிய நடிகர்கள் இல்லாமலும் அதை சிறப்பாக எடுக்க முடியும். அனுசரண் இயக்குநர் மட்டும் அல்ல, சிறந்த படத்தொகுப்பாளரும் கூட. கருணாகரன் சிறந்த நடிகர், அவர் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். சின்ன படங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்.
திண்டுக்கல் ஐ லியோனி பேசுகையில்,
இந்தப் படத்தின் மூலமாக 21 வருடங்களுக்குப் பிறகு நடிப்பிற்குத் திரும்ப வருகிறேன். இந்தப் படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை இயக்குனர் காரணமாகத்தான் என்னிடம் கொடுத்திருக்கிறார். எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குனர் அனுசரண் வேலை பார்ப்பார். கருணாகரனுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியாக இருக்கும். அனுசரண் நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்தப் படம் அனைவருக்கும் மிகப் பெரிய நம்பிக்கை கொடுக்கும் படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் நன்றி.
இயக்குனர் அனுசரண் பேசுகையில்,
எனக்கு வாய்ப்பு கொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையா உடைய கதை தான் இந்த பன்னிகுட்டி. இந்தக் கதையை தயாரிப்பாளரிடம் கூறும் போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்துக் கொண்டிருப்பவர்கள், ஆனால் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நிஜ பன்னிகுட்டியுடன் படப்பிடிப்பை நடத்தினோம். அது மிகவும் கடினமாக இருந்தது. விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை, பல நெருக்கடிகளைக் கடந்து, சில யுக்திகளை பயன்படுத்தித் தான் படம் எடுத்தோம். உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும், அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்கை என்பதை இந்தப் படம் கற்றுக்கொடுக்கும்.
கருணாகரன் பேசுகையில்,
ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்குக் கிடைக்கும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்தக் கதையை இயக்குனர் கூறிய போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான். இயக்குனரின் பதட்டமில்லாத தன்மை, என்னை ஆச்சரியப்பட வைத்தது. இசையமைப்பாளர் இந்த படத்தில் கொடுத்திருக்கும் இசை, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். இந்தப் படம் நம்பிக்கை கொடுக்கும் படம். இந்தப் படத்தில் யோகிபாபு நடித்திருப்பது எங்களுக்கு சந்தோசம். படத்தை மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
ஜுலை 8ம் தேதி ‘பன்னிக்குட்டி’ தியேட்டர்களில் வெளியாகிறது.