கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான தெலுங்கு திரைப்படம் 'காட் ஃபாதர்'.
சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் 'காட் ஃபாதர்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில் சிரஞ்சீவி முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கருப்பு நிற ஆடை அணிந்து நாற்காலியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக அமர்ந்தபடி தோற்றமளிப்பது அவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.
வீடியோவில், சிரஞ்சீவி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவருக்காக அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்க, அப்போது சிரஞ்சீவி காரில் வருகிறார். அந்த காரிலிருந்து இறங்கி ஆவேசமாக அலுவலகத்திற்குள் செல்லும் காட்சியும், அப்போது 'காட் ஃபாதர்' என்ற தலைப்பு இடம் பெறுவதும், தமனின் பின்னணியிசையும் ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது.
மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஆர். பி. சௌத்ரி மற்றும் என். வி. பிரசாத் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.
இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். நயன்தாரா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பூரி ஜகன்நாத் மற்றும் நடிகர் சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தில், கலை இயக்குனராக சுரேஷ் செல்வராஜன் பணியாற்றுகிறார்.
நவராத்திரி வெளியீடாக வர உள்ளது ‘காட் ஃபாதர்’.