மாதவன், சற்குணம் இணையும் படத்தில் ஹாலிவுட் கலைஞர்

‘களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன்’ படங்களை இயக்கியவரும், விமல், ராஜ்கிரண் நடித்த ‘மஞ்சப் பை’ படம் மற்றும் நயன்தாரா நடித்த ‘டோரா’ படங்களைத் தயாரித்த இயக்குனர் சற்குணம் அடுத்து மாதவன் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய், றெக்க’ படங்களைத் தயாரித்த காமன்மேன் கணேஷ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் சற்குணம் கூறியதாவது,

“இந்தப் படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் ‘ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2’ மற்றும் ‘ட்ராகுலா அண்டோல்டு’ படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார். ‘வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் இயக்குனர் ரதிந்திரன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக உருவாகும் இந்தப் படத்தை குழந்தைகளுக்கான படமாகவும் உருவாக்குகிறோம். குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் இருக்கும். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது,” என்றார் இயக்குனர் சற்குணம்.

Read Previous

‘ஜுங்கா’ டைட்டில் டீசர், ரசிகர்கள் அமோக வரவேற்பு

Read Next

உத்தரவு மகாராஜா – டீசர்