நடிகர் சங்கத் தேர்தல் – பாக்யராஜ் அணி வேட்பு மனு தாக்கல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் தற்போது நிர்வாகத்தில் உள்ள நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட உள்ள பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளார் பதவிக்கு பிரசாந்த், துணைத் தலைவர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இன்று பாக்யராஜ் அணியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் முடிந்த பின் பத்திரிகையாளர்களை இந்த அணியினர் சந்தித்தனர்,

“நடிகர் சங்க கட்டிடம் பாதி முடிந்த நிலையில் அப்படி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அணி உருவாகியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். ரஜினிகாந்த் எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். நீங்கள் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று கூறி ரஜினி வாழ்த்தினார். ஆரம்பத்தில் இருந்து ஐசரி கணேஷ் தான் இந்த கட்டிடம் கட்ட பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்தார். இந்த அணியின் செயல்பாட்டில் அரசியல் இல்லை, அரசியல் இருந்தால் நானே போட்டியிட மாட்டேன்,” என்றார் கே.பாக்யராஜ்.

“சங்க கட்டிடம் கட்டவும் நாடக கலைஞர்கள் நல்வாழ்விற்காகவும் தான் இந்த அணியை துவக்கியுள்ளோம். நல்ல ஒரு அணியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம், நிச்சயம் வெற்றி பெற்று சங்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார் டாக்டர் ஐசரி கே கணேஷ்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் ஐசரி கே கணேஷ், துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா, நடிகை குட்டி பத்மினி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் பிரஷாந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பூர்ணிமா பாக்யராஜ், கே ராஜன், ஆர்த்தி கணேஷ், விமல், நிதின் சத்யா, சங்கீதா, காயத்ரி ரகுராம், ரமேஷ் கண்ணா, சின்னி ஜெயந்த், ஸ்ரீகாந்த், சிவகாமி, ரஞ்சனி, அயூப்கான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Read Previous

சித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ டீசர்

Read Next

நடிகர் சங்கத் தேர்தல் – நாசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து