சின்னத் திரையில் பிரபல தொகுப்பாளர், நடிகராக இருப்பவர் விஜய் ஆதிராஜ். இவர் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு இயக்குனராக அறிமுகமாகும் படம் புத்தகம். நகரத்தை மையமாக கொண்ட ரொமேன்டிக் காமெடி திரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடிக்கிறார். மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் நாயகியாக அறிமுகமாகிறார்.
‘காதலில் சொதப்புவது எப்படி’யில் நடித்த விக்னேஷ் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி உள்ளட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
டாக்டர். ராமதாஸ், மற்றும் மஞ்சுளா தாயரிப்பை கவனிக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். லக்ஷமன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்காக முதல் முறையாக முழு ராக் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வசந்தன் உருவாக்கியுள்ள இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். பணத்தின் தேவை மற்றும் பயன்பாடு பற்றி இந்த பாடல் விவரிக்கிறது.
பென்னி தயாள் பாடியுள்ள இந்த பாடலை தனிப்பாடலாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். பென்னி மற்றும் அவரது குழுவினர் இந்த பாடலுக்கான வீடியோவில் தோன்றுகின்றனர். மேலும் இந்த பாடலில் 186 நாடுகளின் நாணயங்களும் தோன்றுவது தனிச்சிறப்பாகும்.
இந்த பாடலுக்கான ஐடியாவை சொன்னதுமே பாடலாசிரியர் வரிகளை எழுத துவங்கிவிட்டதாக இயக்குனர் விஜய் ஆதிராஜ் கூறுகிறார். இதுவரை ராக் கலந்த பாடல்கள் பல இருந்தாலும் முதன் முறையாக முழு ராக் பாடலாக இது உருவாகியுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார். கேட்டவுடன் முணுமுணுக்கும் வகையில் இந்த பாடல் அமைந்திருப்பதாகவும் கூறுகிறார்.
இந்த பாடலை கார்க்கி எழுதிய விதம் வியக்க வைப்பதாகவும் இயக்குனர் கூறுகிறார். தந்தை வைரமுத்துவை போலவே இவரும் புகழ் பெறுவார் என்றும் இயக்குனர் பாராட்டுகிறார்.
படத்தின் அறிமுக பாடலாக இடம் பெறும் இந்த பாடல் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி கணேஷ், மனோபாலா, உமா பத்மநாபன், கிரேசி மோகன், பாத்திமா பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகரத்தில் நடக்கும் கதை கொண்ட இந்த படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடும் என்கிறார் இயக்குனர் விஜய் ஆதிராஜ். காதல், காமெடி, திரில் என எல்லா ஆம்சங்களும் கொண்ட முழு நீள பொழுது போக்கு படமாக இது இருக்கும் என்கிறார் அவர்.