யு டிவி தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் விக்ரம், ஜெகபதி பாபு, அனுஷ்கா, எமி ஜாக்சன் நடிக்கும் படமான ‘தாண்டவம்’ இந்த வாரம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘சிவ தாண்டவம்’ படமும் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தற்போது ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை தெலுங்கில் வாங்கிய தயாரிப்பாளர் கல்யாண் ‘சிவ தாண்டவம்’ படத்தை நேரடி தெலுங்குப் படம் என சொன்னதே இதற்குக் காரணம். இதை ஒரு சில தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்க்க, விவகாரம் திரைப்பட வர்த்தக சபையில் முறையிடப்பட்டது. பின்னர் ‘சிவ தாண்டவம்’ டப்பிங் படம்தான் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தால் இந்த வாரம் அதாவது 28ம் தேதி வெளியாக வேண்டிய ‘சிவ தாண்டவம்’ ஒரு வாரம் தள்ளி அக்டோபர் 5ம் தேதியன்று வெளியாகும் எனத் தெரிகிறது.