தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளராக பதவி வகித்து வந்த இயக்குனர் அமீர், இன்று அப்பதவியிலிருந்து விலகினார். இது தொடர்பாக அவர் இயக்குனர்கள் சங்க துணைத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘தாண்டவம்’ திரைப்படத்தின் கதை உரிமைப் பிரச்சனை தொடர்பாக என் மீது செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். என்னை குற்றம் சாட்டுவதாக நினைத்து, ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாய் நமது சங்கத்திற்கு வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழ்த்தரமாக நடந்து கொண்டு சங்கத்தின் கண்ணியத்தை காயப்படுத்தியிருக்கிறார்கள்.
சந்தேகத்தின் நிழலோடு ஒரு போதும் எந்தப் பதவியிலும் இருக்க விரும்பாதவன் நான்.
நான் தொடர்ந்து இப்பதவியில் இருந்தால் இவர்கள் என்னை மேலும் மேலும் அகௌரவப்படுத்துவதாக நினைத்து சங்கத்தின் கௌரவத்தை குறைத்துக் கொண்டே இருப்பார்கள்.
தனி மனிதனை விட சங்கமே முக்கியம் என்று கருதுவதாலும், வலிமையாக உருவெடுத்திருக்கிற நமது இயக்குனர்கள் சங்கம் உருகுலைந்து விடக்கூடாது என்பதற்காகவும் என் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதை தாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி,” என எழுதியுள்ளார்.
அடுத்து இயக்குனர்கள் சங்கத்தில் என்ன நடக்கும் என தமிழ்த் திரையுலகமே ஒரு பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.