இயக்குனர் வின்சென்ட் செல்வா, ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது ‘துள்ளி விளையாடு’ என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார்.
படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியும் நடிக்கின்றனர்..
தீப்தி, பட்டாளம் படத்தில் அறிமுகமாகி, ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் உருக்கமான பாத்திரத்தில் நடித்தவர். சமீபத்தில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்யின் தைரியம் மிக்க தங்கையாக நடித்துள்ளார். தீப்தி, தனது துள்ளி விளையாடிய அனுபவத்தை மறக்க முடியாத படமாக குறிப்பிடுகிறார்.
இதில் மூன்று விதமான நோக்கங்கள் கொண்டவர்களிடையே மாட்டிக்கொண்டு போராடும் கேரக்டர். என்னை மையப்படுத்தியும் கதை நகரும் என்பதால் நிறைய நடிக்க வாய்ப்பு இருந்தது. எனது படங்களில் பெயர் சொல்லும் படமாக ‘துள்ளி விளையாடு’ படம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த படத்திற்காக காத்திருக்கிறேன் என்றார்.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை.
ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன், சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா, மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர்.
இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரிக்கிறார். எஸ்.கே. பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ‘துள்ளி விளையாடு’ படத்தில் இயக்குனர் மிஸ்கின் ஒரு பாடல் பாடியுள்ளார்.