2012ல் தமிழ் சினிமா குறைவான ஏற்றத்தையும் நிறைய தாழ்வுகளையும் சந்தித்துள்ளது. எதிர்பார்த்து ஏமாந்து போன படங்கள்தான் அதிகம், எதிர்பாராமல் பார்க்க வைத்த படங்கள் கொஞ்சம் என அப்படியும் இப்படியுமாக அமைந்து அனைவரையும் குழம்பிப் போக வைத்தது.
ஒரு காலத்தில் திரைப்படங்களை குடும்பம் குடும்பமாக ரசித்த காலம் போய் இன்று இளைஞர்களும், இளைஞிகளும் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள் என்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்காக மட்டுமே படத்தைக் கொடுத்தால் வெற்றி என்ற ஒரு சிந்தனை உருவாகி விட்டது.
அதற்கேற்றால் போல் ஓடிய படங்களைப் பார்த்தால் இளம் ரசிகர்கள் மட்டுமே ரசித்த படங்களாகவே இருக்கின்றன. அப்படி என்றால் ஒரு படம் என்பது அனைத்து ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டிய அவசியமில்லையா.
குழந்தைகளுக்கான படம் என்றே சில வருடங்களுக்கு முன் வந்துள்ளன. அப்படி என்றால் இன்று இளைஞர்களுக்கான படம் என்பதும் ஒரு வகையே.
நம்மைப் பொறுத்தவரை ஒரு படம் என்பது அனைத்து ரசிகர்களுக்கான படமாக இருக்க வேண்டும். ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கான படமாக இல்லாமல், இளம் ரசிர்களை மட்டும் கவர்ந்த படம் என்றால் அது வெற்றிகரமான படமா ?
இதை மீறி நாம் கேட்டால், வயதான ரசிகன் என்று நமக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்து விடுவது போல் பேசுகிறார்கள்.
சமீபத்தில் பார்த்த பல புதுப்படங்களின் விளம்பரங்கள் கூட இளைஞர்களை நோக்கி மட்டுமே எய்யப்படும் அம்பாக தெரிகிறது. இதற்கு காரணம் வேறு கற்பிக்கிறார்கள், அவர்கள்தான் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்று. அப்படியென்றால், மற்றவர்கள் வராமல் போனதன் காரணம் என்ன, அவர்களை வரவைக்கும் வழி என்ன என்று யாராவது ஆராய்கிறார்களா என்றால், அதுவும் கிடையாது.
சென்னையில் ஒரு நல்ல திரையரங்கிற்குச் சென்று ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் ஒருவருக்கு சராசரியாக ஆகும் செலவு , டிக்கட் 100 ரூபாய், பைக்கில் சென்றால் பார்க்கிங் 30 ரூபாய், இடைவேளையில் காபி குடிக்க 25 ரூபாய் என 155ரூபாய் ஆகிவிடுகிறது. இதுவே குடும்பத்துடன் சென்றால் 500 ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது.
ஒரு மாதத்திற்கு நாலு படம் பார்த்தால் 2000 ரூபாய் ஆகிவிடுகிறது. சராசரியாக மாதம் 10, 000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவருக்கு 2000 ரூபாய் என்பது அதிகப்படியான செலவுதான். இதைக் குறைக்க ஒரு குடும்பத் தலைவன் யோசிப்பதை விட, செலவே இல்லாமல் செய்து விடத்தான் யோசிப்பான்.
ஏன், இந்த செலவு கணக்கையும் சொல்கிறோமென்றால், இளம் ரசிகர்கள் அவர்களுக்கு என்று பிடித்த படங்களை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது இல்லையென்றால் உடனே , பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் போட்டு ஒரே வரியில், ஏன் ஒரே வார்த்தையில் அந்த படத்தை காலி செய்து விடுகிறார்கள்.
ரசனை என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் என்பதைக்கூட பலர் புரிந்து கொள்வதில்லை. சிலருக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும், சிலருக்கு கமலைப் பிடிக்கும், சிலருக்கு இளையராஜாவைப் பிடிக்கும், சிலருக்கு ரகுமானைப் பிடிக்கும்.
மற்றவர்கள் சொன்னதை அப்படியே நம்பி, நல்ல படத்தைக் கூட பார்க்காமல் தவற விடுபவர்கள் பல பேர்.
ஒரு படத்தை பார்க்கணும்னு நினைச்சா போய்ப் பாருங்க, நீங்க பார்த்துட்டு வந்து நல்லா இருக்கா இல்லையான்னு முடிவு பண்ணுங்க.
ஏன், இவ்வளவு சொல்ல வர்றோம்ணா….இந்த 2012 ல ஏறக்குறைய 140 படங்கள் கிட்ட வந்திருக்கு…அதுல பல இடங்கள்ல நாம விசாரிச்ச விதத்துல வெற்றிப் படங்கள்னு பார்த்தால் இடம் பெறுவது சில படங்கள் மட்டுமே. இது எத்தனை நல்ல படங்கள்னு படத்தைப் பார்த்திருந்தீங்கன்னா நீங்களே முடிவு பண்ணிக்குங்க.
நண்பன், மெரினா, ஒரு கல் ஒரு கண்ணாடி, வழக்கு எண் 18/9, கலகலப்பு, நான் ஈ, சுந்தர பாண்டியன், பீட்சா, துப்பாக்கி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், கும்கி.
மேற் சொன்ன இந்த படங்கள்தான் இந்த ஆண்டோட வெற்றிப் படங்கள்ல முன்னணியில் இருக்கு. இந்த படங்கள்லாம் எத்தனை கோடில எடுத்தாங்க, எவ்வளவு கோடி வசூலாச்சின்னு சொல்ற எந்த கணக்கும் சரியான கணக்கா இருக்க வாய்ப்பு இல்ல. தோராயமா காதுல விழுறத வச்சி எழுதறதுதான் பலரோட வேலை. நாமளும் அப்படி செய்ய தயாரா இல்ல.
நல்லா வசூல் செய்யற படங்கள்தான் நல்ல படங்கள், வசூல் செய்யாத படங்கள் நல்ல படங்களே இல்லங்கற மாதிரிதான் இங்க இருக்கு. இது மொதல்ல மாறணும்.
சினிமாங்கறதே கமர்ஷியல்தான், இதுல கமர்ஷியல் சினிமா என்ன ? ஆர்ட் சினிமா என்ன ?
எதுக்கும் கதைதான் முக்கியம். மீதிலாம் அப்புறம்தான்னு இந்த வருடத்தோட படங்கள் புரிய வச்சிருக்கு.
அப்படி ஹீரோக்களை முன்னிலைப்படுத்தாம வந்த சில படங்கள்….கொள்ளைக்காரன், செங்காத்து பூமியிலே, தோனி, அம்புலி, உடும்பன், அரவான், கழுகு, பச்சை என்கிற காத்து, கலகலப்பு, ராட்டினம், மனம் கொத்திப் பறவை, மதுபானக்கடை, அட்டகத்தி, மன்னாரு, சாட்டை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை, கும்கி, புதுமுகங்கள் தேவை …
ஹீரோக்களே இருந்தாலும் வீழ்ந்த (?) படங்கள்னு பார்த்தால், 3, சகுனி, பில்லா 2, முகமூடி, மாற்றான், போடா போடி, நீதானே என் பொன்வசந்தம் ஆகியவை…
எண்ணற்ற புதுமுகங்கள் இந்த ஆண்டில் அறிமுகமாகியுள்ளார்கள். இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிக, நடிகையர் என ஒரு நீண்ட பட்டியல். தமிழ் சினிமாவிற்கு புது ரத்தத்தை பாய்ச்ச முயற்சித்துள்ளார்கள் எனலாம். இந்த புதுமுகங்கள் 2013ல் சாதிக்கப் போவதை வைத்துத்தான் அவர்களது திறமை கணிக்கப்படும்.
நாம் என்னதான் சொன்னாலும், திரையரங்கிற்கு சென்று பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒரு சராசரி ரசிகன் சொல்லும் ஒரு வார்த்தையில்தான் அனைவரது எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.
அந்த ஒரு வார்த்தை ….
பிடிச்சிருக்கு….