ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடிக்க ரோஹித் ஷெட்டி இயக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் முழு பக்க விளம்பரம் இன்று சில ஆங்கில நாளிதழ்களில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
பொதுவாக, தமிழ் படங்களுக்கு இப்படி ஒரு பக்க விளம்பரம் கொடுப்பதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. மற்ற , சிறு முதலீட்டுப படங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே இதற்குக் காரணம்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘முகமூடி’ படத்திற்கு ஆங்கில நாளிதழ்களில் இப்படி விளம்பரம் கொடுத்திருந்தார்கள். அதற்கு எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில், இன்று வெளியாகியுள்ள ஹிந்திப் படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ விளம்பரம் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்த படத்தின் விளம்பரம் தமிழர்களையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் கிண்டல் செய்வதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
இந்த படத்தின் விளம்பரத்தில் கதை – கே. சுபாஷ் என்றிருந்தது தமிழ்த் திரையுலகத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழில் பல படங்களை இயக்கியவர் கே. சுபாஷ். பிரபு தேவா நடித்த நினைவிருக்கும் வரை, அஜித் நடித்த நேசம், விஜயகாந்த் நடித்த சத்ரியன், பிரபு நடித்த உத்தம புருஷன் போன்ற பல படங்களை இயக்கியவர்.
கண்டிப்பாக, இவர் நம்மைப் பற்றிய கிண்டலான கதையை கொடுத்திருக்க மாட்டார் என்று நம்புவோம்…