உடலை வலுவாக கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் அனைவருக்கும் உதாரணமான மனிதராக இருப்பவர் அர்னால்டு ஸ்வார்ஸ் நேகர். இவர் ஒரு பாடிபில்டர்,ஹாலிவுட் நடிகர்,அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர்.
பலசாலியாக பொய்த் தோற்றம் காட்டும் நட்சத்திரங்களிடையே, போலியான புஜபலம் காட்டுபவர்களிடையே நிஜவலிமை காட்டிவரும் ஒரே நடிகர் அர்னால்டு.
உடற்கட்டை விரும்புவோர் மட்டுமல்ல உலகப் பட ரசிகர்களிடையேயும் அர்னால்டுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
ஆர்னால்டு நடித்து ‘தி லாஸ்ட் ஸ்டாண்ட்’ (The Last Stand) படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படம் அர்னால்டு ரசிகர்களுக்கு 2013 தொடக்கத்திலேயே விருந்தாகப் போகிறது. இது ஒரு முழுநீள ஆக்ஷன் படைப்பு.
அர்னால்டுடன், ஜானி நாக்ஸ் வில்லி.லூயிஸ் கஸ்மேன், ஜேமி அலெக்சாண்டர் போன்றோர் நடித்துள்ளனர்.
கிம் ஜி வூன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு கிம் ஜி யாங், இசை மௌக். 107 நிமிடங்கள் பரபரப்பு காட்டும் படமாக இது இருக்கும். போதை மருந்து கடத்தும் கும்பலின் அட்டகாசங்களும் கார் துரத்தல் காட்சிகளும் இதுவரை பார்க்காத விறுவிறுப்புடன் இருக்கும்.
ஷெரீப் ரே ஓவன்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் தான் அர்னால்டு நடிக்கிறார்.பாதுகாப்புத் துறையில் பணியிலிருந்து விடுபட்டு தன் வாழ்க்கையை மாற்றி எழுதிக் கொள்கிறார். புது அவதாரம் எடுத்து போராடும் போது கூட்டாளிக்கு நேரும் இழப்பு இவரை மாற்றுகிறது. ஒரு கதாநாயகன் எடுக்கும் விஸ்வரூபம் தான் படத்தின் மையம்.
அர்னால்டு நடிக்கும் படத்தின் கதையை விட அவரது வாழ்க்கை சுவாரஸ்யமானது. திருப்பங்கள் நிறைந்தது. இவர் ஆஸ்திரியாவில் 1947ல் பிறந்தவர். தாய் தந்தை இருவருமே உள்ளூரில் பாதுகாப்பு துறைப் பணியில் இருந்தனர்.
அர்னால்டின் தந்தை மிகவும் கண்டிப்பாகப் பிள்ளைகளை வளர்த்தார். கண்டிப்பு என்றால் அப்படி ஒரு கட்டுப்பாடு. மீறினால் தண்டனை உண்டு. மிலிட்ரி மேனான அப்பா தன் பிள்ளைகளிடமும் அப்படி நடந்து கொண்டதுதான் பிறகு பிரச்சனை ஆனது. உடற்பயிற்சி,உடற்கட்டு மோகம் போன்றவை தன் அப்பாவின் தாக்கத்தால் எற்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்.
கால்பந்து போன்ற பல விளையாட்டுகளிலும் இவருக்கு ஆர்வம் இருந்தது. இருந்தும் ஜிம் போவதில் தனி விருப்பம்.
13 வயதில் ஆர்வம் ஏற்பட்டு 15 வயதில் தீவிரமாகி உடற்பயிற்சியில் இறங்கினார். இருப்பினும் இவரது தந்தை இவர் மீது ஆளுமையை செலுத்திக் கொண்டிருந்தாராம்.
சிறுவயதில் அடித்தல். முடியை பிடித்துப் இழுத்தல் போன்றவற்றை தன் தந்தை செய்து வந்ததாகக் கூறும் அர்னால்டு அவர் மேல குற்றமில்லை அதுதான் ஆஸ்திரிய – ஜெர்மானியாரின் மனம் பான்மை தமக்கு பிறரை பணிய வைக்கும் குணம் அதன் வெளிப்பாடுதான் இது என்பார் அர்னால்டு.
உலகின் பல பிள்ளைகளின் கனவுகள் பெற்றோரால் உடைக்கப்படுகின்றன என்கிற அர்னால்டுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு. தன் தந்தையின் இறுதிச் சடங்கு நடந்த போது அர்னால்டு வேறு ஒரு பாடிபில்டர் போட்டியில் இருந்தார். கலந்து கொள்ளாததற்கு குற்ற உணர்ச்ச்கியும் இல்லை இவருக்கு. அந்த அளவுக்கு தந்தையின் உருவம் அச்சம் மூட்டும் பிம்பமாகியிருக்கிறது இவருக்கு என்கிறார்கள் நண்பர்கள்.
அர்னால்டின் தந்தை ஒரு கட்டத்தில் நாஜி கட்சியில் சேர்ந்து 2ஆம் உலகப் போரில் பங்கெடுத்தவர் என்றால் பார்த்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் உள்ளுர் போலீசில் இருந்தவர் ராணுவத்தில் சேர்ந்தவர்.
பிறப்பில் ஆஸ்திரியரான அர்னால்டு ராணுவத்தில் கூடபணியாற்றியுள்ளார். அப்போதும் பாடி பில்டிங்கில் கவனம் செலுத்தி வந்தார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். மிஸ்டர் யூரோப்பு க்கு போட்டியிட்டார். அதுமட்டுமல்ல ஐரோப்பியர்களில் உடற்கட்டுள்ள மனிதர் என்கிற பட்டமும் பெற்றார். இப்படித் தேர்வானதும் இவரைத் தேடிப் புகழ் வந்தது.
10 வயதில் இவரது கனவு அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது.ஆனால் மிஸ்டர் யுனிவர்ஸ் ஆன பின் அமெரிக்கா செல்வது சுலபமாகத் தேடி வந்தது. அதுமட்டுமல்ல மூன்று முறை இப்பட்டத்தைப் பெற்றார். பத்துவயது கனவு இருபது வயதில் பெருமையுடன் நனவானது.
தனது 21 ஆவது வயதில் லாஸ் ஏஞ்சல்ஸில் வெனிஸில் கோல்டு ஜிம்மில் பங்கு பெற்று செயல்பட்டார். மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை ஏழு முறை பெற்றார்
ஆரம்பத்தில் அமெரிக்கா செல்லும் போது விசா பெறுவதில் பிரச்சனைகளைச் சந்தித்தார். ஆனால் பிள்ளைகளில் திரைப்பட நட்சத்திரமாந்தும் புகழ்பெற்ற வி.ஐ.பி அந்தஸ்து பெற்றவராகி விட்டார்.
உடற்பயிற்சியின் அனுபவங்களையும் அறிவுரைகளையும் கொண்டு இவர் எழுதிய உடற்கட்டுமானக் கல்வி பற்றிய புத்தகம் (The Education of a Body Builder) சக்கைப் போடு போட்டது இது உலகளாவிய வாசகர்களைக் கொண்ட ஒரு நூலாகும்.
ஹாலிவுட் திரையுலகில் 1969ல் ‘ஹெர்குலிஸ் இன் நியூயார்க்’ படம் மூலம் நுழைந்தவர்.’டெர்மினேட்டர்’ படம் மூலம் மாபெரும் வெற்றி பெற்றார். ‘ப்ரிடேட்டர்’, ‘டோட்டல் ரீகால்’, ‘ஜினியர்’, ‘எரேசர்’, என தொடர்ந்து ‘எக்ஸ்பெண்டபுள்’ வரை 38 படங்கள் நடித்து விட்டார். குறிப்பாக ‘டெர்மினேட்டர்’ பல பாகங்கள் இவருக்கு உச்ச புகழைக் கொடுத்தது.
கோல்டன் குளோப் போன்ற ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ள அர்னால்டு. சர்வதேச புகழ்பெற்ற நட்சத்திரம் என்று பல முறை தேர்வானார்.
கலிபோர்னியா மாகாணத்தின் 38 வது ஆளுநராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலும் பங்கு பெற்று சேவை செய்தார்.
இப்போது அர்னால்டுக்கு வயது 65 இப்போதும் இவர் கையில் ஏராளமான படவாய்ப்புகள் உள்ளன. ‘தி லாஸ்ட் ஸ்டாண்ட்’ தவிர ‘தி டாம்’, ‘டெர்மினேட்டர் – 5’, ‘தி லெஜண்ட் ஆப் கானன்’ என அணிவகுக்கின்றன.
‘தி லாஸ்ட் ஸ்டாண்ட்’ ஜனவரி 18 முதல் இந்தியாவில் வெளிவர இருக்கிறது. முழுநீள ஆக்ஷன் விருந்தாக ரசிகர்களுக்கு 4 மொழிகளில் வெளியாகிறது.
தமிழகமெங்கும் A.V.Mohan வெளீ யிடு