மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில், அமைதிப்படை – 2 -நாகராஜ சோழன் M.A.M.L.A., திரைப்படம், சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், வையாபுரி, எம் எஸ் பாஸ்கர், கோமல்ஷர்மா, வர்ஷா, மிருதுளா, அன்சிபா, கிருஷ்ணமூர்த்தி என்ற மிகப்பெரிய நடிப்புப் பட்டாளம் நடிக்க , பெரும்பாலும் கேரளா எல்லைகளில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டு அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
முழுக்க முழுக்க சமீபத்திய அரசியல் கிண்டல் படமாக, சிரிக்க வைக்கவும் தயாராகி வருகிறது அமைதிப்படை – 2.
சத்யராஜ் -மணிவண்ணன் கூட்டணி என்றாலே அந்த படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். அரசியல், கிண்டல், கேலி, நகைச்சுவை என இந்த காம்பினேசன் பெரிய ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம். நூறாவது நாள், புதுமனிதன், வாழ்க்கைச் சக்கரம், மாமன் மகள் போன்ற படங்கள் உதாரணம். சத்யராஜ் நடித்த அரசியல் கிண்டல்ர் படங்கள் பெருமளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிவண்ணனின் இயக்கத்தில் உருவாகும் 50வது, சத்யராஜின் நடிப்பில் வெளிவரும் 200வது படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உள்ளதால், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டை மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர் வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்தினர்.
ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு, சத்யராஜின் இருநூறாவது பட விழா, மணிவண்ணனின் ஐம்பதாவது பட விழா, என முப்பெரும் விழாவாக சென்னை டிரேட் சென்டரில், பிரபல நடிகர் ,நடிகைகள் கலந்துகொள்ள பிரம்மாண்ட விழாவாக விரைவில் நடக்க உள்ளது என தயாரிப்பாளர்களான சுரேஷ் காமாட்சி மற்றும் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.