ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்க பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் பூலோகம்.
பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டமாய் இப்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டு பிரம்மாண்டமான காட்சிகளை பணத்தை வாரி இறைத்து படமாக்க தைரியமான தயாரிப்பாளர் வேண்டும். இந்த படத்தை அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளர்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் 4 கோடி ரூபாய் செலவு செய்கிறார்களாம்.
10 நாட்களுக்கு மேல் நடைபெற உள்ள இந்த கிளைமாக்ஸ் காட்சிக்காக திருவண்ணாமலையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 1000க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகையர், திருவண்ணாமலை சுற்று வட்டாரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4000 மாணவர்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் கலந்து கொள்ள திருவண்ணாமலை நகரமே விழாகோலம் பூண்டிருக்கிறது.
இந்த காட்சியை சுட்டெரிக்கும் வெயிலிலும் , மிகப் பெரும் கூட்டத்திற்கு நடுவே படமாக்கி வரும் இயக்குனரை தயாரிப்பு வட்டாரம் வெகுவாகவே பாராட்டி வருகிறது.
இந்த காட்சி பெருமளவில் பேசப்பட்டு ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்.