பாலாவின் ‘பரதேசி’ திரைப்படம் வட இந்தியாவிலும் வெளியாக உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் ‘பரதேசி’ படத்தை தனது பேன்டம் பிலிம்ஸ் லிட் நிறுவனம் மூலம் வட இந்தியாவில் வெளியிடுகிறார்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பாலாவின் ‘பரதேசி’ படத்தை வட இந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அதனை அங்கு வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘பரதேசி’ படத்தைப் பார்த்த மிகவும் கவரப்பட்ட அனுராக் காஷ்யப் இதனை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் வெளியிட உள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி சப் டைடில்களோடு படம் அங்கு வெளியாக உள்ளது.
அனுராக் காஷ்யப் ‘பிளேக் பிரைடே’, ‘தேவ் டி’ உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர். அவரது சமீபத்திய படமான ‘காங்ஸ் ஆப் வாசிப்பூர்’ அனைவரது பாராட்டையும் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சேது’ படத்தின் மூலம் அறிமுகமான பாலா, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’ படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். புது யுக இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பாலா அகில இந்திய அளவில் சிறந்த இயக்குனராக பாராட்டப்படுபவர்.
இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படமான ‘பரதேசி’ தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். அதர்வா,தன்ஷிகா,வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களை பாலா தனக்கே உரிய கலைநயத்தோடு இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்.