தடை பல கடந்து வெற்றி வாகை சூடி வருகிறது விஸ்வரூபம். தமிழ்நாட்டில் கடந்த வாரம்தான் வெளியானது. இன்று வரை பல காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக தொடர்ந்து வருவதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களிலும் வசூல் நிலவரம் நன்றாகவே உள்ளதாகத் தெரிகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கடந்த வார இறுதி நாட்களிலும் படம் திரையிடப்பட்டு வசூல் தொகையை மேலும் உயர்த்தியுள்ளது.
ஹைதராபாத்திலும், பெங்களூரிலும் பத்திரிகையாளர்களையும், திரையுலகினரையும் சந்தித்து கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் விஸ்வரூபம் 2 பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, விஸ்வரூபம் 2 பட வேலைகளை ஆரம்பித்து விட்டதாகவும், இன்னும் சில மாதங்களில் மற்ற பணிகள் முடிவடைந்ததும், இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெயிடப் போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.