தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு ‘டிரென்ட்’ வந்து கொண்டேயிருக்கும். அதுவும் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கும்.
கடந்த 2012ம் ஆண்டில் பல புதிய இயக்குனர்களின் படங்கள் வெற்றி பெற்றதாலும், பல பெரிய ஹீரோக்களின் படங்கள் தோல்வியடைந்ததாலும் இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
இப்போது அனுபவத்திற்கும், புதுமைக்குமான போட்டி நடந்து கொண்டு வருகிறது. சமீப காலமாக புதிய இயக்குனர்களின் படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன.
நேற்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய இயக்குனர் பாலசந்தர் புதிய இயக்குனர்களின் படைப்புக்களை வரவேற்றுப் பேசினார்.
“தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், பாரம்பரியமான அமைப்பு. இந்த சங்கம் உருவாவதற்கு தாசரி நாராயணராவ் ஒரு காரணமாக இருந்தார். அந்த காலத்தில் நானும், ஸ்ரீதரும் மட்டுமே இளைஞர்கள். மற்ற டைரக்டர்கள் அனைவரும் ஐம்பது வயதை தாண்டியவர்கள்.
புதிதாக வரும் இளம் டைரக்டர்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை தருகிறார்கள். தமிழ் சினிமா இப்போது இயக்குனர்கள் கையில் வந்து விட்டது. எதிர்காலத்திலும் இயக்குனர்கள் வசமே இருக்கும். இயக்குனர்கள் ஒருநாளைக்கு ஒரு படமாவது பார்க்க வேண்டும். உருப்படாத படத்தைக் கூட, அது ஏன் உருப்படவில்லை? என்பதற்காகவும் பார்க்க வேண்டும்.
இயக்குனர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, தோழமை உணர்வுடன் இருக்க வேண்டும்,” என இயக்குனர் கே. பாலசந்தர் பேசினார்.
இயக்குனர்கள் சங்க புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பல முன்னணி இயக்குனர்களும், இளம் இயக்குனர்களும் மற்ற திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை இயக்குனர் சங்க செயலாளர் அமீர், பொருளாளர் எஸ்.பி. ஜனநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.