எதிர் நீச்சல் – விமர்சனம்

ethir-neechal-review தயாரிப்பு – வுன்டர் பார் பிலிம்ஸ் – தனுஷ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இசை – அனிருத் பாடல்கள் – வாலி, தனுஷ் ஒளிப்பதிவு – ஆர். வேல்ராஜ் படத்தொகுப்பு – டி.இ. கிஷோர் கலை – துரைராஜ் சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா நடனம் – பிருந்தா, தினேஷ், பாபா பாஸ்கர், ஷெரீப் மக்கள் தொடர்பு  – ரியாஸ் அகமது வெளியான தேதி – 1 மே, 2013

வாழ்க்கையை ஏதோ, பிறந்தோம் , வளர்ந்தோம், வாழ்ந்தோம்னு இல்லாம ஏதாவது சாதிக்கிற மாதிரி வாழணும்னு சொல்ற கதை. தனக்கு வச்ச பேர் பிடிக்காம அந்த பேரை மாத்தற நாயகன், அப்புறமா பேருக்காக வாழ்க்கை இல்லை, வாழ்க்கைதான் ஒருத்தரோட பேரையே தீர்மானிக்கிறதுன்னு புரிஞ்சிக்கிறாரு.

கொஞ்சம் ‘டீப்பா’ அலசிப் பார்த்தால் தத்துவ மழை பொழியற கதையை அப்படியே ஜாலியா சொல்லியிருக்கிறதுதான் படத்தை ரசிக்க வச்சிருக்கு. இடைவேளை வரை கலகலப்பாக படத்தை நகர்த்தின இயக்குனர் துரைசெந்தில்குமார், இடைவேளைக்கப்புறம் கொஞ்சமாவது சென்டிமென்ட் வேணாமான்னு ஃபீல் பண்ணி ‘டிராக்’ மாறியிருக்கவே தேவையில்லை. அதுவும், நம்மள ‘ஃபீல்’ பண்ண வைக்காமப் போனதுதான் படத்துக்கு கொஞ்சம் ‘டிராஜடியா’ அமைஞ்சிடுச்சி. இல்லன்னா…இந்த வருஷ சினிமா மாரத்தான்ல இந்த படம்தான் பர்ஸ்ட்…

‘குஞ்சிதபாதம்’ கற தன்னோட பேரை ஸ்டைலா ஹரிஷ்-னு மாத்திக்கிட்டு , கூடவே இருக்கிற ஏரியாவையும் மாத்திக்கிட்டு புது ஏரியாவுக்கு வர்றாரு சிவ கார்த்திகேயன். ஸ்கூல் டீச்சரான பிரியா ஆனந்தைப் பார்த்ததும் காதலிக்கிறாரு. அப்புறமா பிரியாவும் சிவாவை காதலிக்கிறாங்க. ஆனால், ஒரு கட்டத்துல சிவா பேரை மாத்தி வச்சிக்கிட்ட விஷயம் பிரியாவுக்குத் தெரிய வருது.

‘ஒரு சாதாரண பேருக்கே இப்படி யோசிச்சி பேரை மாத்தற நீ, வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வன்னு’ பேசி காதலே வேண்டாம்னு போறாங்க. ஆனாலும், வழக்கம் போல, சிவாவுக்கு புத்திமதி சொல்லி ஏதாவது சாதிக்கச் சொல்றாங்க. சின்ன வயசுல இருந்தே ‘அத்லெட்’டா இருக்கிற சிவா நடக்கப் போற மாரத்தான் போட்டியில கலந்து ஜெயிக்கிறாரா இல்லையாங்கறததுதான் படத்தோட கிளைமாக்ஸ்.

வழக்கமான கதை, ஏற்கெனவே பார்த்த காட்சியமைப்புகள், என இருந்தாலும் ஆரம்பத்துல இருந்து ‘நான் ஸ்டாப் காமெடியா’  நகர்ற படம் ரசிகர்களை நல்லாவே என்டர்டெய்ன் பண்ண வைக்குது.

தனக்கு என்ன வரும், தன் கிட்ட ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பாங்கன்னு சிவ கார்த்திகேயன் ஒரு சில படங்கள்லயே புரிஞ்சிக்கிட்டு நடிச்சிருக்கிற படம் இது. இந்த படத்துல  சிவாவுக்கு‘ டபுள் புரமோஷன்’ கிடைச்சிருக்கு. ஏன்னா, ஹீரோவான இவரோட காதலுக்கு ஹெல்ப் பண்ண சதீஷ் தான் ஐடியா சொல்றாரு…இனி சிவா, யாரோட காதலுக்கும் ஹெல்ப் பண்ண வேண்டியதில்லை..

சிவா, சதீஷ் கூட்டணி ‘மெரினா’ படத்திற்குப் பிறகு இந்த படத்துலயும் நல்லாவே ஸ்கோர் பண்ணியிருக்காங்க.

ஸ்கூல் டீச்சரா..சாரி..கான்வென்ட் ஸ்கூல் டீச்சரா பிரியா ஆனந்த். எந்த கான்வென்ட்ல டீச்சர் இப்படி ‘இடை’ தெரிய சேலை கட்டி கிளாமரா வருவாங்க, எந்த ஸ்கூல் நிர்வாகம் அனுமதி அளிக்கும்னு தெரியலை..இருந்தாலும், டைரக்டரோட எண்ணம் இவங்க கேரக்டரை கிளாமரா காட்டறதுதான்னு நல்லாவே புரியுது. அதுக்காக ‘அந்தமான் சாங்ல’ ஓவர் கிளாமர் டைரக்டர் ஸார்….பசங்கள படிக்க விடுங்க…பார்க்க விட்றாதீங்க…ப்ளீஸ்…

‘அட்டகத்தி’ நந்திதா, இடைவேளைக்கு அப்புறம்தான் வர்றாங்க, நல்ல வேளை ‘இடை’ எல்லாம் காட்டவில்லை. ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து பணபலம் படைத்தவர்களால் இவர் ‘பெண்ணே’ இல்லை என சொல்லப்பட்டு, விளையாட்டை விட்டே விலகியவர். உண்மையாக நடந்த ஒன்றை சினிமாவிற்குள் சேர்க்கும் போது நமக்கு வலிக்கா விட்டாலும் பரவாயில்லை உண்மையாக அனுபவித்த ‘சாந்தி’க்களுக்கு படத்தைப் பார்த்தால் வலிக்கப் போவது நிச்சயம்.

சந்தானத்துக்கு சவால், சந்தானத்திற்கு சரியான போட்டி…இப்படிலாம் சீக்கிரமே எழுத வச்சிடுவாரு சதீஷ். என்ன ஒரு டைமிங் காமெடி…அதுலயும் நாம ரொம்ப ரசிச்சது, “நீ மாரத்தான்ல ஓடுவியான்னு வள்ளிக்கு டவுட்டு, நீ வள்ளி கூட ஓடிடுவியோன்னு கீதாவுக்கு டவுட்டு’…, இப்படி நிறைய சொல்லாம்.

நந்திதாவின் அப்பா சரத் லோகிதாஸ் சிவா தமிழுக்கு கிடைத்துள்ள புது அப்பா, ஜெயபிரகாஷ், மனோபாலா, சுவாமிநாதன், மதன் பாப் கொஞ்சமாக வந்தாலும் நிறைவு.

வியாபார நோக்கத்திற்காக தனுஷ் – நயன்தாரா பாடல், மற்ற பாடல்களிலும் அனிருத்தின் இசை அமர்க்களம்தான். ‘நிஜமெல்லாம்…’, ‘பூமி என்ன சுத்துதே…’, ‘வெளிச்ச பூவே….’, ‘உன் பார்வையில்…’ அனைத்துமே இந்த ஆண்டின் ஹிட் பாடல்கள்…

எதிர் நீச்சல் –  ‘மாரத்தான்’…

 

Read Previous

இயக்குனர்களின் கையில் சினிமா – பாலசந்தர்

Read Next

‘நான் கடவுள்’ பூஜா நடிக்கும் ‘விடியும் முன்’

Most Popular