அக்னி நட்சத்திர காலமான தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் சென்னைக்கு 1,200 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் (புயல் சின்னம்) மையம் கொண்டுள்ளது. இது தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலுக்கு ‘மகாசேன்’ என்று பெயர் சூட்டி உள்ளனர்.
“15–ந்தேதிக்கு பிறகு, சூரியன் மீதான ஒரு கோளின் ஆதிக்கம் குறையும் என்று கோள்களின் நிலவரம் தெளிவாக காட்டுகிறது. எனவே, 15–ந்தேதியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் இந்த புயல் பலமிழந்து ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும்.
‘தானே’ புயல், கடுமையான சூறைக்காற்றுடன் மழையை கொடுத்தது. ஆனால், ‘மகாசேன்’ புயல், தமிழ்நாட்டுக்கு சூறைக்காற்றை விட கனமழையைத்தான் அதிகமாக கொடுக்கும். ஆந்திராவில் மழையை விட சூறைக்காற்று அதிகமாக வீசும்.
ஒரிசா, மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மழை பெய்யும்”, என வானிலை ஆராய்ச்சி நிபுணர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த ‘மகாசேன்’ புயலால் தமிழ் நாட்டில் வெயிலின் கடுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.