நடிகை அஞ்சலி அவருடைய சித்தி பாரதி தேவியுடன் சமரசம் ஆகி மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை அஞ்சலி ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திடீரென காணாமல் போனார். அவருடைய சித்தி பாரதி தேவி மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார். அதன் பின் அவருடைய சித்தியும் காணாமல் போன அஞ்சலியைக் கண்டு பிடித்து தர வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளித்தார்.
ஷுட்டிங் எதற்கும் செல்லாமல் இருந்த அஞ்சலி ஐந்து, ஆறு நாட்கள் கழித்து திரும்பி வந்தார். இனி அவருடைய வாழ்க்கையில் சுதந்திரமாக இருக்கப் போவதாகவும், புதிய வாழ்ககைப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தெலுங்கு படப்பிடிப்புக்களிலும் கலந்து கொண்டார்.
இதனிடையே சில நாட்களுக்கு முன் அஞ்சலி, ஸ்ருதிஹாசன், ரவிதேஜா ஆகியோருடன் நடித்துள்ள ‘பலுப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு அவருடைய சித்தி பாரதி தேவியுடன் வந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இருவருக்குமிடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அஞ்சலிக்கு சேர வேண்டிய சொத்துக்களை அவருடைய சித்தி கொடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த செய்திதான் ஆந்திரத் திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.