‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்குமார்.
தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், மதராச பட்டினம், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, சகுனி, தாண்டவம், பரதேசி, உதயம் என்எச் 4, ரஜினிகாந்த் நடித்த குசேலன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர்.
‘கேங்ஸ் ஆப் வாசிப்பூர்’, ‘ஜோக்கர்’ ஆகிய ஹிந்திப் படங்களுக்கும், சில தெலுங்கப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
தற்போது விஜய் நடிப்பில் ‘தலைவா’, ஜெயம் ரவி நடிப்பில் ‘நிமிர்ந்து நில்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
‘காதலன்’ படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் இடம் பெற்ற ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே…’ பாடலை சிறு வயதிலேயே பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
சைந்தவி , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் இடம் பெற்ற ‘ரண்டக்க….’ பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ‘கேளாமல்,,,’, ‘ஏபிசிடி’ படத்தில் ‘மஞ்சள் முகமே…’, ‘பையா’ படத்தில் ‘அடடடா மழைடா…’, ‘சுறா’ படத்தில் ‘தஞ்சாவூர் ஜில்லாக்காரி…’, ‘மதராசபட்டிணம்’ படத்தில் ‘ஆரூயிரே…’, ‘தெய்வத் திருமகள்’ படத்தில் ‘விழிகளில் ஒரு வானவில்…’, ‘மயக்கம் என்ன’ படத்தில் ‘பிறை தேடும்…’, ‘வெடி’ படத்தில் ‘இப்படி மழை…’, ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் ‘நெஞ்சுக்குள்ளே…’, ‘உதயம் என்எச் 4’ படத்தில் ‘யாரோ இவன்’ போன்ற பல ஹிட்டான பாடல்களைப் பாடியுள்ளார்.
இவருக்கும் பின்னணிப் பாடகி சைந்தவிக்கும் வரும் 27ம் தேதி சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், மேயர் ராமனாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் திருமணம் நடக்கிறது.
இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காதலில் விழுந்த இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இவர்களின் திருமணம் விமரிசையாக நடைபெற உள்ளது.
மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி அன்று மாலையே நடைபெற உள்ளது.
திருமண ஏற்பாடுகளை இருவரது குடும்பத்தாரும் கவனித்து வருகிறார்கள்.
இருவருக்கும் நமது வாழ்த்துகள்…