ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிக்கும் ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தின் ஒலிக்கோர்வை ஹாலிவுட்டில் நடந்து முடிந்துள்ளது.
‘விஸ்வரூபம்’ படத்திற்கு ஒலிக்கோர்வை பணிகளை கவனித்த குணால் ராஜன் இப்படத்திற்கு ஒலி மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.
தயாரிப்பாளர்கள் ஆனந்த் கோவிந்தன், அருண் வைத்தியநாதன் மற்றும் படத்தின் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ், வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நடைபெற்ற இறுதிக் கட்ட ஒலிக்கோர்வை முழுவதும் உடனிருந்தனர்.
ஹாலிவுட்டின் மூத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து இப்படத்திற்கான ஒலிப்பதிவை சர்வதேச தரத்தில் அமைத்துள்ளனர்.
டாம் மார்க்ஸ் (தி மேன் ஆப் ஸ்டீல்), புரூஸ் நிஸ்னிக் (சின் சிட்டி, பேஸ் ஜாம்), ஹேரி (கேப்டன் அமெரிக்கா) ஆகியோர் ‘கல்யாண சமையல் சாதம்’ நகைச்சுவையாகவும், சிறப்பாக உள்ளதாகவும் புகழ்ந்துள்ளனர்.
மொழி புரியாவிட்டாலும் படத்தைப் பார்த்து ரசிக்க முடிந்ததாகவும், இந்திய கல்யாண கலாச்சாரத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள உதவியதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.
ஒரு காதல் படத்திற்கு ஏன் ஹாலிவுட் சென்றீர்கள் என்ற கேள்விக்கு இயக்குனர் பிரசன்னா பதிலளத்ததாவது, “சினிமா ஒரு ஒலி – ஒளி அனுபவம். எங்கள் திரைப்படம் மென்னுணர்வு நகைச்சுவைப் படமானாலும், ஒலி தான் பார்வையாளர்களைக் கதையின் உலகிற்கு அழைத்துச் செல்லும்.
முக்கியமாக நவீன நகைச்சுவைப் படங்களிலும், சிறந்த உலக சினிமாக்களிலும், சின்னச் சின்ன ஒலிகள் கவனமாகக் கோர்க்கப்பட்டு நகைச்சுவைக்கு பெரும் பங்கு வகித்திருக்கும்,” என்றார்.
விரைவில் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. படத்தின் முதல் பிரதியும் தயாராகி விட்டது.
இன்றைய இளம் தலைமுறையினரிடையே நடக்கும் காதல், கல்யாணம், அவர்களின் பெற்றோர்களின் தவிப்புகளை கலாட்டாவாகச் சொல்லும் படம் இது.