‘பிரியாணி’ பாடல்கள் இணையதளங்களில் வெளியானது…

karthi and yuvan

தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வந்தாலும், பல நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது, கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவரும் 100வது படம் என்ற சிறப்பைப் பெற்ற ‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக சில இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிகாரபூர்வமாக ‘பிரியாணி’ படத்தின் இசையை ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்ட நிலையில் இப்படி நடந்திருப்பது அப்படக் குழுவினரை அதிகமாகவே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இது சம்பந்தமா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “பைரஸி என்பது தவறான ஒன்று. வருத்தமாக இருக்கிறது. ஆகஸ்ட் 31ம் தேதி என் பிறந்த நாளன்று இப்படத்தின் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுக்க நினைத்திருந்தோம்.

என்னுடன் கடவுள் இருக்கிறார். நான் யாரையும் வெறுக்கவில்லை. நாமெல்லாம் ஒரே காற்றை சுவாசிக்கும் மனிதர்கள்தான்.

வேறு எந்த படத்தின் பிரச்சனைக்கும் நான் எதுவும் கருத்து சொல்லவில்லை என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை என நினைக்கக் கூடாது.

இந்த திரையுலகில் நான் ஒவ்வொருவரின் உழைப்பையும் மதிக்கிறேன். நான் அப்படித்தான் வளர்ந்தவன். அதனால் வேறு பிரச்சனையையும், இந்த பிரச்சனையையும் ஒப்பிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

நான் எதற்கும் கலங்கவோ, வருத்தப்படவோ இல்லை, எல்லாம் நன்மைக்கே, ” என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பலர், ‘தலைவா’ படம் திரையரங்குகளில் வெளிவராததற்கும், இணையதளங்களில் முழு படங்களே வந்து விட்ட நிலையில் , திரையுலகினர் யாரும் ‘தலைவா’ படத்திற்கு ஆதரவாகப் பேசவில்லை. ஆனால்,  ‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் ஆடியோ வடிவில் வந்ததற்கே இப்படி கோபப்படுகிறீர்களே, என பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கள் ‘பிரியாணி’ படக்குழுவினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Read Previous

தில்லாக ‘புகை பிடிக்கும்’ நாயகி…

Read Next

‘பிரியாணி’ கதை இதுதான்…